உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உக்கிரமாகும் பாலியல் வக்கிரம்! சீரழியும் சிறுவர், சிறுமியர்; தடுப்பது எப்படி?

உக்கிரமாகும் பாலியல் வக்கிரம்! சீரழியும் சிறுவர், சிறுமியர்; தடுப்பது எப்படி?

பாலியல் குற்றங்கள் பெருகி, இளம் சிறார் மற்றும் இளைய தலைமுறையினர் சீரழிய ஆபாச இணையதளங்களும், சமூக வலைதளங்களுமே மிக முக்கிய காரணம் என்கின்றனர் போலீசார். ஆபாச இணையதளங்கள் மீதான கட்டுப்பாடுகள், பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதன் வாயிலாகவே பாலியல் குற்றங்களை தவிர்க்க முடியும் என்பதும் சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.கோவை நகரில் வசிக்கும் ஒருவர் சமீபத்தில், தனது, 17 வயது மகளை காணவில்லை என, போலீசில் புகார் அளித்தார். போலீசார் தேடிவந்த நிலையில், அந்த சிறுமி மர்மமான முறையில் வீடு திரும்பினார். போலீசார் விசாரணையில், பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பாட்டிக்கு துணையாக வீட்டிலிருந்த இவருடன், 'ஸ்நாப் சாட்' மூலம் கல்லுாரி மாணவர்கள் ஜெபின்,20 மற்றும் ரக்சித்,19 ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி நேரில் காண, தனது வீட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியாமல் கோவைபுதுார் பகுதியில் உள்ள அந்த மாணவர்களின் அறைக்கு, 16ம் தேதி சென்றிருக்கிறார்.தீபக்,20, அபினேஸ்வரன்,19, முத்து நாகராஜ்,19, யாதவராஜ்,19, நிதிஷ்,19 ஆகிய மேலும் 5 மாணவர்கள் இருந்துள்ளனர். ஏழு பேரும் மாணவியை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். பின் சிறுமியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாட்டி வீட்டுக்கு அருகே இறக்கி விட்டு சென்றுவிட்டனர். போக்சோ வழக்கு பதியப்பட்டு, ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த அறைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா, சிறுமி மட்டுமின்றி வேறு மாணவியர், பெண்களையும் பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரிக்கின்றனர்.

சமூக பிரச்னை

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''சிறுவர் - சிறுமியர் 15 வயதிலேயே பல விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் மூழ்கி விடுகின்றனர். அதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். மொபைல் போன், இன்டர்நெட் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட பிரச்னையாக பார்ப்பதை விட, இதை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மொபைல் போனுக்குள் தேவையானதும் இருக்கிறது; தேவையற்றதும் இருக்கிறது. அவற்றில் வளர்ச்சிக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான வழியில் கொண்டு செல்லும் விஷயங்களை சிறுவர், சிறுமியர் தவிர்க்க வேண்டும். பெற்றோரும் தங்களது குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.

கண்காணிங்க...

மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் கூறுகையில், ''டிஜிட்டல் காலமாக இருக்கிறது. குழந்தைகள் மொபைல் போனில் எதை பார்க்கிறார்கள்; யாருடன் பேசுகிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து கற்றுத்தர வேண்டும். அவர்களின் மன நலம் எப்படி உள்ளது என்பதை கண்காணிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி, அவர்களது அன்றாட நிகழ்வுகளை கேட்டறிய வேண்டும். குழந்தைகள் முன் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். மொபைல் போன் பயன்படுத்தும் குழந்தைகள், தங்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றக் கூடாது. சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, பள்ளி சென்று வரும் இடங்களில் அந்நிய நபர்களுடன் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். முன் பின் தெரியாத நபர்களுக்கு மொபைல் எண் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளுக்கு தனியாக செல்லும் பட்சத்தில், அவர்களை கண்காணிக்க வேண்டும். உதவி மைய எண்: 1098 பற்றி குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

'சமூக வலைதளத்தை பயன்படுத்த தடை தேவை'

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் - சிறுமியர் சமூக வலைதளங்களை பயன்படுத்தாத வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். கட்டுப்பாடுகள் இல்லாததால், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் சமூக வலைதளங்களை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். தங்களின் புகைப்படங்கள், வீடியோ பகிர்கின்றனர். முன் பின் தெரியாத நபர்களிடம் பேச ஆரம்பிக்கின்றனர். இதை பயன்படுத்தி, பலர் தங்களின் தேவைக்காக சிறுமியரை பயன்படுத்திக் கொள்ளும் நிலை உள்ளது.18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத வகையில், சட்டத்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கென பிரத்யேகமாக சமூக வலைதள கணக்கு துவக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடு அவசியம். கல்வி தேவைக்காக பயன்படுத்த வேண்டியிருப்பின், பெற்றோரின் கண்பார்வையில் இருக்க வேண்டும். சமூக வலைதள ஆப்களில் இதுபோன்ற மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சிறுவர் - சிறுமியரின் மனதை மாற்றும், அவர்களுக்கு பாலியல் உணர்ச்சிகளை துாண்டும் வகையிலான நிகழ்வுகள், சம்பவங்கள், அவர்கள் முன் நடக்காமல் பார்க்க வேண்டும். ஒரு சின்ன வீட்டில் தாய், தந்தை, பள்ளி, கல்லுாரி படிக்கும் குழந்தைகள் என அனைவரும் ஒரே அறையில் தங்கும் நிலை பல குடும்பங்களில் உள்ளது. குழந்தைகளின் மனதை பாதிக்கும் வகையில் நடக்கும் சில விஷயங்களும் உணர்ச்சிகளை துாண்ட காரணம் ஆகிறது. இது, தனிப்பட்ட பிரச்னை இல்லை; சமூக பிரச்னை. இதில், பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

'குழந்தைகளை கண்காணிக்க தொழில்நுட்பங்கள் இருக்கு'

ஸ்டான்லி பெலிக்ஸ், கல்லுாரி பேராசிரியர், ராமநாதபுரம்: மொபைல் போன்களில் 'பேரன்டல் கண்ட்ரோல்' உள்ளன. அதை பயன்படுத்தினால், என்னென்ன இணையதளங்கள் பயன்படுத்துகின்றனர் எனத் தெரியும். 'பேரண்ட் ஆப்'களையும் பயன்படுத்தலாம். அவர்கள் பயன்படுத்தும் மொபைல்களில், பெற்றோரின் இ-மெயில் முகவரியை இணைத்தால், அனைத்து தகவல்களும் தெரியவரும். லேப்-டாப், கம்ப்யூட்டர்களிலும் இதே நடைமுறையை பின்பற்றலாம். பள்ளி நிகழ்ச்சிகளில், மாணவர்களைக் கொண்டே விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தலாம். பெற்றோர் குழுக்கள் ஏற்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அன்பரசி, பள்ளி ஆசிரியர், டாடாபாத்: குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம், அதிக கட்டுப்பாடு இருக்கக்கூடாது. எதிலும் எச்சரிக்கை இருக்க வேண்டும். பெற்றோரை தவிர வேறு யாரும் நல்லது செய்ய முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். மொபைல்போன் தகவல் தொடர்புக்கு மட்டுமே என்பதை விளக்க வேண்டும். மொபைல்போன் வாயிலாக கிடைக்கும் நல்ல விஷயங்களையும் தெரிவிக்க வேண்டும்.நாகவள்ளி, இல்லத்தரசி, மதுக்கரை: எந்தவொரு விஷயத்தையும் செய்யாதே என்றால் அதையே குழந்தைகள் செய்வர். அதுபோலவே மொபைல்போன் பயன்பாடும். நல்லது எது, கெட்டது எது என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். அவர்களது வயதுக்கு இறங்கி, பேச வேண்டும். அவர்களது மனதில் இருப்பதை தெரிவிப்பர். தாய், சகோதரிகள், பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், அனைத்து பிரச்னைகளும் தீரும்.

'சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த சட்டம்'

வக்கீல் ஆர்.அருணாசலம், பார் கவுன்சில் துணை தலைவர்: போக்சோ சட்டம் குறித்து மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும். இலவச சட்ட உதவி மையங்கள் வாயிலாக, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். போக்சோ குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அளிக்கும் தண்டனை குறித்து, பஸ் ஸ்டாண்ட், அரசு மற்றும் தனியார் பஸ்கள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பொது இடங்களில் துண்டு பிரசுரம் ஒட்ட வேண்டும். போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்படும் வயது வரம்பை, 16 ஆக குறைக்க வேண்டும்.மகளிர் கோர்ட் முன்னாள் அரசு வக்கீல் வி.தமிழ்செல்வி: 17 வயதுக்கு உட்பட்டோர், மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும். போக்சோ வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து முடித்து தீர்ப்பு அளிக்க வேண்டும். போக்சோ குற்றத்தில் ஈடுபடுவோருக்கு விசாரணை முடியும் வரை ஜாமின் வழங்கக் கூடாது.போக்சோ குற்றம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால், இதுதொடர்பாக விசாரிக்க தனி டீம் ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். போக்சோ வழக்கில் பொய் புகார் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், உண்மை குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது உரிய தண்டனை பெற்றக்கொடுப்பதன் வாயிலாக குற்றங்களை தடுக்கலாம்.

குழந்தைகளுடன் நேரம் செலவிட்டால் போதும்!

மனநல மருத்துவர் சீனிவாசன்: குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு மொபைல் போன் தேவையில்லை. இணைய பயன்பாடு அதிகரித்து இன்று 'டிஜிட்டல் அடிக்சன்' என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளிடம் குறைந்தது, 15 நிமிடம் மனம் விட்டு பேசுங்கள். குழந்தைகளை பேச விட்டு கவனியுங்கள். அவர்களது விருப்பத்தை அறிய வேண்டும். எதையாவது மறைக்க முயற்சிக்கிறார்களா, பெற்றோர் இல்லாத நேரத்தில் பயன்படுத்துகின்றனரா, பயன்படுத்திய பின் தடயங்களை அழிப்பது, உடை அணிதல், ஒப்பனை உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும். புதிய நண்பர்கள், இரவு நேர மொபைல் பயன்பாடு, பகல் நேரத்தில் துாக்க கலக்கம், பேசுவதை கவனிக்கத் தவறுதல், தேவையற்ற கோபம் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும். மாறுதல் தெரிந்தால், அவர்களிடம் பேச வேண்டும். எந்நேரமும் அறிவுரை வழங்கும் எண்ணத்தில் இருக்கக்கூடாது. அவர்களை பேச விட்டு கவனித்தால், மனதில் உள்ளதை அறிந்து, தீர்வு காணலாம்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 21, 2025 20:32

உங்க மகனாகட்டும், மகளாகட்டும் கண்காணிச்சு, நல்லது சொல்லிக்கொடுத்து வளருங்க .....


Ramesh Sargam
பிப் 21, 2025 20:20

தமிழகத்தில் இதுவரையில் ஒரு அரசியல் வீட்டு பெண்களும் இந்த பாலியல் தொல்லையில் சிக்கவில்லை. அப்படி சிக்கும்வரையில் தமிழக அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்காது.


தமிழ்வேள்
பிப் 21, 2025 20:05

தமிழகத்தில் இந்த மாதிரியான குற்றம் அதிகரிக்க காரணம் திராவிட கோட்பாடு...அவர்கள் முன்பு செய்ததை தற்போது செய்வதை சிறுவர்களும் செய்கிறார்கள்... இப்படி அசிங்கம் செய்வதுதான் கெத்து என போதிக்கும் திரைப்பட துறை அடுத்த காரணம்..


அசோகன்
பிப் 21, 2025 16:31

இதை செய்வதே திமுக கூட்டம்தான்...... தும்பை விட்டு வாலை பிடிக்க வழிச்சொல்லும் கட்டுரை.


Muralidharan S
பிப் 21, 2025 12:31

பழைய காலத்தில், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்க, அடித்து, உதைத்து திருத்த அனைத்து உரிமையும் இருந்தது.. அப்படி அடிவாங்கிய மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலமைக்குத்தான் சென்று இருக்கிறார்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பள்ளி கணக்கு, அறிவியல் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் என்றாலே எங்களுக்கு பயம்.. பள்ளி வெராண்டாவில் துரத்தி, துரத்தி அடிப்பார்கள், கேள்விக்கு பதில் சொல்லவில்லை, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால்.. பெற்றவர்களுடன் ஆசிரியர்களும் நெருக்கமாக இருந்தனர்... எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும், பெற்றவர்கள் காதுக்கு போய்விடும்.. வெளி உலகத்திலும், நமக்கு, நமது குடும்பத்திற்கு தெரிந்தவர்கள் யாராவது நாம் தவறு செய்வதை பார்த்தல், கண்டிப்பார்கள், வீட்டிலும் சொல்லிவிடுவார்கள். அக்கம் பக்கத்திலும் அப்படித்தான்.. அடுத்தவீட்டு நபர்கள் கூட நம்மை கண்டிக்க முடியும்.. வீட்டிலும் கூட்டுக்குடும்ப அமைப்பு.. அப்படி ஒரு கட்டுக்கோப்பு.. அப்படி ஒரு சமூக அமைப்பு இருந்தது.. யாருக்கும் தெரியாமல் எதுவும் செய்துவிட முடியாது.. இன்று சுருங்கி சுருங்கி.. யாருக்கும் யாரையும் கண்டிக்க உரிமை இல்லை. ஏன் பெற்றவர்களுக்கே அந்த நிலைமை.. பெற்றவர்களும், ஆசிரியர்கள் கண்டித்தால் சண்டைக்கு செல்கிறார்கள். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள்.. அதனால், ஆசிரியர்களும், மாணவன் மொபைலில் ஆபாச படம் பார்த்தல் என்ன, போதையுடன் வகுப்பிற்குள் நுழைந்தா ஏன்னா.. யாருடன் எங்கே சுற்றினால் நமக்கு என்ன.. நமக்கு எதற்கு வம்பு என்று கண்டும் காணாமல் போய்விடுகிறார்கள்.. ஒரு படி எல்லை மீறி சில ஆசிரியர்களும் இந்த குற்றங்களை எல்லாம் செய்கிறார்கள்... மாணவர்களுடன் சேர்ந்து... வகுப்பில் அசிங்க அசிங்கமாக இரட்டை அர்த்த பொருள்பட பேசிக்கொண்டு... அப்புறம் என்ன மரியாதை இருக்கும்... சமூக அவலங்களும், போதை பொருட்களும், குடியும், ஆபாச படங்களும், ஒருவர் பற்றி மற்றவர்களுக்கு நிஜமான அக்கறை இல்லாமல் போனதும்... இவை அனைத்து சேர்ந்துகொண்டு மாணவர்களையும், ஆசிரியர்களையும்... ஏன்.. பெற்றவர்களையும் கூட சீரழித்துக்கொண்டு வந்துவிட்டது.. இனி இதை மாற்றுவது என்பது மிக கடினம்.. கடுமையான சட்டங்களால் / தண்டனைகளால் மட்டுமே முடியும்.. நல்ல விதமாக சொல்லி திருத்தும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது..


திருவூரான்
பிப் 21, 2025 12:28

போலுஸ் என்கவுண்ட்டர்ல போட்டுத் தள்ளணும். இல்லேன்னா மக்கள் போட்டுத்தள்ளணும். அரசு, நீதிமன்றங்கள் மேலே நம்பிக்கையே போயிடிச்சு


இந்தியன்
பிப் 21, 2025 09:37

ஆபாச இணையதளங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும்


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 08:18

தமிழக முதல்வராக யோகியை போல் ஒருவர் வேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை