எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு அரசியல் கட்சியாலும் இதுவரை நடத்தப்பட்ட பாத யாத்திரை; மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்ற முதல் யாத்திரை, 'என் மண்; என் மக்கள்' யாத்திரை தான். நான் பிறந்து வளர்ந்த மண்ணான, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் கோலாகலமாக நடந்தது. இந்த யாத்திரை, நுாறாவது நாளாக, 225வது சட்டசபைத் தொகுதியாக, என் பிறந்த மண்ணில் நடைபெற்றது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.அரவக்குறிச்சி எனக்கு அரசியலில் அரிச்சுவடியாகவும், ஆன்மபலம் தரும் போதி மரமாகவும் ஆன தொகுதி. இனி அரவக்குறிச்சியில் தாமரை மட்டும் தான் தலைநிமிரும். பொதுவாக வெற்றிகளும், தோல்விகளும் தலைமை மீது மட்டும் திணிக்கப்படுவதால், அச்சாணிகளும் ஆணிவேர்களும் அஸ்திவாரங்களும் எத்துணை அவசியம் என்பது, அதிகம் அறியப்படுவதில்லை. உண்மையில் சதமடித்த சந்தோஷம் எனக்கு அதிகரிக்கக் காரணம், எத்தனை திறமையாளர்களின் கூட்டு முயற்சியால், இது சாத்தியமானது என்று என்ணிப் பார்க்கிறேன். 'ஸ்டிக்கர்'
இந்த யாத்திரைப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி, அனைத்து நிகழ்வுகளையும் திட்டமிட்ட மாநில துணைத் தலைவர் நரேந்திரன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக களத்தில் முன்நின்ற மாநில விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோருக்கும் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய குழுவினருக்கும் சிறப்பான நன்றி. கரூர் மாவட்டம் ஏற்றுமதி மற்றும் தறி, நெசவு, ஆயத்த ஆடைத் தொழில்களால், அதிகம் அறியப்பட்டது. ஆனாலும், பாடுபட்டு உழைக்கும் தொழில் முனைவோருக்கு துணை நிற்க வேண்டிய மாநில அரசு, எந்தத் தொலைநோக்குத் திட்டத்தையும் உருவாக்குவதில்லை. மாறாக, மத்திய அரசின் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளுக்கும், திராவிட வண்ணம் பூசி 'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலையை சிறப்பாகச் செய்கிறது. ஆற்றல்மிக்க அரவக்குறிச்சி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லை. வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இப்பகுதியில் மூன்று நதிகள் அருகில் ஓடியும், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. இவை அனைத்தும் மாற வேண்டும். கரூரில் விவசாயம், நீர் மேலாண்மை, தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் வர வேண்டும். ஆட்சி செய்தவர்கள் அனைவருமே, தொகுதியை முன்னேற்றுவதை விட, தங்களையும் தங்கள் குடும்பங்களையும் மட்டும், முன்னேற்றிக் கொண்டனர்.280 நாள் தலைமறைவு
தொகுதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது பண மோசடி வழக்கில், 280 நாட்களாக சிறையில் இருக்கிறார். இத்தனை நாட்களாக, துறை இல்லாத அமைச்சராக மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெற்ற அவர், இப்போது தான் ஜாமின் பெறும் நோக்கோடு பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இருந்தபோதும், அதே வழக்கில் அவருடைய தம்பி, 280 நாள்களாகத் தலைமறைவாக இருக்கிறார். செந்தில் பாலாஜி போலவே, தி.மு.க.,வின் 16 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது; எந்த நேரமும் சிறைக்கு செல்ல நேரிடும். தமிழகத்தை தி.மு.க., கடன்கார மாநிலமாக மாற்றியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், 8 லட்சம் கோடி ரூபாயாக மாறி இருக்கிறது. மொத்தம், 8 லட்சத்து 23,000 கோடி ரூபாய் கடன், தமிழகத்துக்கு இருக்கிறது. இந்தக் கடனை அடைக்க இன்னும் 86 ஆண்டுகள் தேவைப்படும். தற்போதைய தி.மு.க., ஆட்சி நிறைவு பெறும்போது, ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாயை, வட்டித் தொகையாக மட்டும் செலுத்தும் நிலை ஏற்படும். கமிஷன் அடிப்பதற்காகவே பட்ஜெட் போடுகிறது, தி.மு.க., அரசு. தற்போதைய பட்ஜெட்டில், 1,500 கோடி ரூபாய் செலவில், சென்னை அடையாறு நதியை சுத்தம் செய்ய போவதாகச் சொல்லி நிதி ஒதுக்கி உள்ளனர். கடந்த ஆண்டும் 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தனர். இரண்டு ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாய் செலவு செய்ய, அடையாற்றில் என்ன இருக்கிறது? ஏமாற்று வேலை
'ஐந்து ஆண்டுகளில் 3.5 லட்சம் இளைஞர்களுக்கு, அரசு வேலை வழங்குவோம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இதுவரை 10,600 பேருக்கு மட்டும் தான் வேலை கொடுத்திருக்கிறது. இதுவும் ஒரு ஏமாற்று தான். திராவிடக் கட்சிகளில், முன்பு போன்ற சிறந்த தலைவர்கள் இல்லை. தங்களை வளப்படுத்த விரும்பும் தலைவர்கள் தான் இப்போது இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் விலை வைத்திருக்கும், தி.மு.க., என்ற வர்த்தக நிறுவன ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவோம். லோக்சபா தேர்தலில், திராவிட மாயையில் இருந்து, தமிழக மக்களை மீட்டெடுப்போம். பயணம் தொடரும்...