சொத்து குவிப்பு வழக்கை எதிர்த்த அமைச்சர்களின் மனு விசாரணைக்கு ஏற்பு
தங்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மனுக் களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. விடுவிப்பு கடந்த 2006- - 2011ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், இருவரையும் ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் விடுவித்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து, ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தார்; வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நேற்று நீதிபதிகள் அசானுதீன் அனுமல்லா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோரது மேல்முறையீட்டு மனுக்களை முழு விசாரணைக்கு ஏற்பதாகவும், ஏற்கனவே அமைச்சர்களுக்கு எதிரான கீழமை நீதிமன்ற விசாரணை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். டில்லியில் நடக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்குகள், இனி டில்லியில், உச்ச நீதிமன்றத்தில் தான் நடை பெறும். - டில்லி சிறப்பு நிருபர் -