பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., விதிகளுக்கு மாறாக, வேந்தராக முதல்வரை நியமிக்க வேண்டும் என்று, தமிழக அரசு பிடிவாதமாக இருப்பதால், சித்த மருத்துவ பல்கலை சட்ட மசோதாவுக்கு அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனைகள், பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து, சித்த மருத்துவ பல்கலை உருவாக்கும் மசோதா, 2022ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1398udy9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மசோதாவில், 'பல்கலை வேந்தராக கவர்னருக்கு பதிலாக, முதல்வர் செயல்படுவார். மேலும், துணை வேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனங்களுக்கு, முதல்வர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த பல்கலை அமைப்பதற்காக, தமிழக அரசு தரப்பில், சென்னை மாதவரம் பகுதியில், 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், யு.ஜி.சி., விதிக்கு மாறாக, பல்கலை வேந்தராக முதல்வர் செயல்படுவார் மற்றும் அவருக்கு தான், பல்கலையின் அனைத்து அதிகாரமும் என கூறப்பட்டுள்ளது குறித்து, அரசிடம் கவர்னர் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு அரசு அளித்த பதில் திருப்தி அளிக்காததால், அந்த மசோதாவை, கடந்தாண்டு கவர்னர் திருப்பி அனுப்பினார். மசோதாவில் எவ்வித திருத்தம் செய்யாமல், மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, அக்., 15ம் தேதி மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன், மசோதா தொடர்பாக கவர்னர் தெரிவித்த கருத்துகளை நிராகரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில், இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், மசோதா குறித்து முடிவெடுக்குமாறு, அதை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி விட்டார். இந்த விவகாரத்தில், தமிழக அரசின் பிடிவாதத்தால் தான், மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என, இந்திய மருத்துவ முறை டாக்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சித்தா டாக்டர்கள் கூறியதாவது: அரசு பல்கலைகளில், தங்களுக்கு விருப்பமான நபர்களை மட்டுமே துணை வேந்தராக நியமிக்க வேண்டும் என, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், தனியார் டாக்டர் ஒருவரை துணை வேந்தராக நியமிக்க, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கவர்னருக்கு அனுப்பிய மூன்று பேர் பட்டியலில், அந்த தனியார் டாக்டர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தார். அரசு தரப்பிலும், கவர்னர் அலுவலகத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆனால், கவர்னர் ரவி, அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அரசு டாக்டராக பணியாற்றிய நாராயணசாமியை துணை வேந்தராக நியமித்தார்; இது அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலை உட்பட, பல பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்காமல், அரசு காலம் தாழ்த்தி வருகிறது. சித்தா பல்கலையை பொறுத்தவரை, கவர்னர் வேந்தராக இருந்தால், துணை வேந்தர், பதிவாளர், நிதி அலுவலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு, அரசு டாக்டர்களுக்கான வாய்ப்பு இருக்கும். அதேநேரம், முதல்வர் வேந்தராக இருக்கும்பட்சத்தில், தங்களுக்கு சாதகமான தனியார் டாக்டர்களையே நியமிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். இம்மசோதாவில் சில திருத்தங்களை செய்தால், ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்திய மருத்துவ முறை சிகிச்சைகளுக்கு, அரசு நல்லது செய்ய வேண்டுமென்றால், பிடிவாதங்களை தளர்த்தி, மற்ற பல்கலை போல் வேந்தராக கவர்னரை நியமிக்கும் வகையில், மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடுதான் மாற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழர்கள் வருத்தப்படும் நிகழ்வு
இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து, சித்தா மருத்துவ பல்கலை அமைய, கவர்னர் உறுதுணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த பல்கலை அமைப்பதற்கு, தமிழக அரசு, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தற்காலிக அலுவலகம் கூட, சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனையில் தயாரானது. தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை, கவர்னர் ஏன் வெறுக்கிறார் என தெரியவில்லை. இது தமிழர்கள் வருத்தப்படுகிற நிகழ்வு. - மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர். - நமது நிருபர் -