காத்திருக்கும் பேராபத்து.. 13 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் மாறாத திக்... திக்...
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
2011 நவ., 6ம் தேதி. திருப்பூரில் மாலை துவங்கி மழை கொட்டித்தீர்க்கிறது.காங்கயம் சாலை, சங்கிலிப்பள்ளத்தையொட்டி அமைந்த சத்யா காலனியில், நள்ளிரவு துாங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து எழுகின்றனர்.வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன.வீட்டுக்கூரை மீதேறி, குடியிருப்பாளர்கள் பலரும் உயிர் பிழைக்கின்றனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், கயிறு கட்டி மீட்கின்றனர்.இதில், உயிரைப் பறிகொடுத்தவர்கள் மட்டும் 14 பேர். ஏராளமான பொருள் இழப்பும் ஏற்பட்டது, தற்போது நினைத்தாலும் திருப்பூர் மக்களின் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைக்கும் நிகழ்வு இது.
அச்சத்துடனேயே வாழ்ந்து பழகிவிட்டோம்
கோரத்தாண்டவ மழையின் அனுபவத்தில் இருந்து மீண்டு வந்த மக்களை சந்தித்த போது, பாதுகாப்பாக இருப்பதால், மழைக்காலத்தில் பாதிப்பு இல்லை; என்றாலும், 13 ஆண்டுகளாக அச்சத்துடனே இருந்து பழகிவிட்டதாக கூறுகின்றனர். மறக்க முடியாத முதல் நாள்கோமளா, டெய்லர், பூலாவாரி சுகுமார் நகர் மேற்கு:மதுரையை சேர்ந்த எனக்கு, அப்போதுதான் திருமணமாகியிருந்தது; நான் வந்த முதல் நாளிலேயே மழை தட்டியெடுத்தது. எங்கள் வீடு உள்ள பகுதியில் பாதிப்பு இல்லை என்றாலும், சங்கிலிப்பள்ளம் ஓடையோரம் வசித்த அனைத்து மக்களும் பாதித்தனர்; தற்போது, ஆபத்து குறைந்துவிட்டாக நம்புகின்றனர். திருப்பூருக்கு வந்த முதல்நாளை நான் மறக்கவே முடியாது.பாதிப்பற்ற சுகுமார் நகர்மதீனா, சுகுமார் நகர்:சங்கிலிப்பள்ளம் ஓடையில் தண்ணீர் அதிகம் வந்தால், சத்யா காலனி முதலில் பாதிக்கும். சுகுமார் நகர் சற்று தள்ளி இருப்பதால், அதிக பாதிப்பு இருக்காது. தற்போது, நொய்யல் ஓரம் தார் ரோடு அமைத்துவிட்டதால், எங்கள் பகுதி பாதுகாப்பான பகுதியாக மாறிவிட்டது; அனைத்து வசதிகளுடன், நிம்மதியாக இருக்கிறோம். விஜயகாந்த் வழங்கிய உதவிரத்தினம், பூலாவாரி சுகுமார் நகர்:2011ம் ஆண்டு மழை சேதம் ஏற்பட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது; எங்கள் பகுதியைவிட, சத்யா காலனி பகுதி மக்கள் தான் வீடுகளை இழந்து, பொருள் இழந்து பாதிக்கப்பட்டனர். சில நாட்களுக்கு பின், இங்கு வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், எல்லோருக்கும் அரிசி, பருப்பு, துணி, மளிகை சாமான்கள் வழங்கியது, கண்ணுக்குள் இருக்கிறது. தற்போது, எங்கள் பகுதி, பாதுகாப்பானதாக மாறியிருக்கிறது.பெரிய தடுப்புச்சுவர் தேவை* மகாலட்சுமி, சத்யா காலனி:எனக்கு திருமணமாகி வந்ததில் இருந்து இங்குதான் வசிக்கிறோம்; 2011ல் மட்டுமே, ஒருமுறை தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படுத்தியது; இருப்பினும், எங்கள் வீடு அதிகம் பாதிக்கவில்லை. ஓடையில், ஆட்டோக்கள் அடித்து வரப்பட்டு குழாயில் அடைத்ததால், வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சங்கிலிப்பள்ளம் ஓடை ஓரமுள்ள வீடுகளுக்கு இப்போதும் ஆபத்து இருக்கிறது; ஓடை ஓரமாக, பெரிய தடுப்பு சுவர் அமைக்கும் வரை ஆபத்து இருக்கும்; கவனமாக இருக்க வேண்டும். கால்வாயாக மாற்ற வேண்டும்* வாஹித், சத்யா காலனி எக்ஸ்டென்சன்:இப்பகுதிக்கு வந்து, 10 ஆண்டுகளாகிறது; 2011 வெள்ளப்பெருக்கு வந்ததை நான் நேரில் பார்க்கவில்லை. இருந்தாலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை எல்லோரும் இன்றும் பேசி வருகின்றனர். அதற்கு பிறகு, பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து, நிம்மதியாக இருக்கிறோம். வீட்டின் பின்புறம், ஓடை இருப்பதால் அச்சத்துடன் இருக்கிறோம். கான்கிரீட் கால்வாயாக மாற்றிவிட்டால் எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆழத் துார்வாரல்; அச்சம் இல்லைமணிகண்டன், சத்யா காலனி:2011ல் மழை வெள்ளம் புகுந்த போது, வீடுகளை இழந்தோம்; பொருட்களையும் இழந்துவிட்டோம்; முக்கிய பொருட்களுடன், அருகே உள்ள மேடான பகுதிக்கு சென்று தங்கியதால் உயிர்பிழைத்தோம். ஒவ்வொரு முறையும், துார்வாரி ஆழப்படுத்துகின்றனர். நொய்யல் ஆறு அருகே, பாலம் கட்டிவிட்டதால், சங்கிலிப்பள்ளம் தண்ணீர் வேகமாக ஆற்றில் சென்றுவிடுகிறது; இதனால், ஆபத்து - அச்சம் இல்லை.கான்கிரீட் சுவர் எழுப்ப வேண்டும்அபுதாஹீர், காயிதே மில்லத் நகர்:சங்கிலிப்பள்ளம் ஓடையை, 10 ஆண்டாக துார்வாருகின்றனர்; மீண்டும் மீண்டும் துார்வாருகின்றனர். கால்வாயின் இருபுறமும், கான்கிரீட் சுவர் எழுப்பினால், ஆபத்து இருக்காது; ஆண்டுதோறும் துார்வார வேண்டியதில்லை. அதிக மழைநீர் வந்தாலும், நேரடியாக நொய்யலுக்கு சென்றுவிடுவதால் ஆபத்தில்லை. நொய்யலில் செல்லாதபட்சத்தில் வீடுகளில் புகுந்துவிடும்.***
தீர்வுதான் என்ன?
'கடந்த, 2011ல் கடும் பாதிப்பு ஏற்பட்டது; அதன் பிறகு பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தனர்; இனி, ஆபத்தில்லை,' என்று, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், கடந்த 2011ஐ போலவே, நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில், சங்கிலிப்பள்ளத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஆபத்து இருக்காது என்று உறுதியாக கூற முடியாது. நீரோடையோரம் உள்ள வீடுகளுக்கு, ஆபத்து என்பது நிரந்தரமானது. ஆட்சியாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஓட்டு வங்கி என்ற அளவில் மட்டும் பார்க்காமல், திருப்பூர் நகரப்பகுதியில் மழையால் பாதிக்கும் பகுதிகளே இல்லை என்ற அளவுக்கு, மக்கள் வாழும் இடம் பாதுகாப்பானது என்று மாற்றிக்காட்ட வேண்டும்.
மாறாத ஆக்கிரமிப்பு
கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 2011 வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவர்களுக்கு, அடுக்குமாடி வீடு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன்படி, தாராபுரம் ரோடு சங்கிலிப்பள்ளம் ஓரம் வசித்த மக்களுக்கு, பல்லடம் அருகே வீடு வழங்கப்பட்டது; அதற்கு பிறகும், ஓடையோரமாக இருந்த ஒரு வீடு கூட குறையவில்லை; மக்கள் அப்படியே வசிக்கின்றனர்.அடுக்குமாடி வீடு கட்டி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டாலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற யாருமே முயற்சிக்கவில்லை. நீரோடைகள், வாய்க்கால்கள் என, நீர்நிலை ஓரமாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில், மழைக்கால பாதிப்பு என்பது மறையாத வடுவாகவே இருக்கும்.
'சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடை
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்'திருப்பூர் மாநகரப்பகுதியில், நொய்யல் கரையின் இருபுறமும், புதிய வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது; அதற்காக, 1000க்கும் அதிகமான ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி வீடு வழங்கப்பட்டது. அடுத்ததாக, சங்கிலிப்பள்ளம் ஓடை மற்றும் ஜம்மனை ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.மாநகராட்சி பகுதியில் உள்ள, நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. காங்கயம் ரோடு, சங்கிலிப்பள்ளம் ஓடை பகுதியில், ஆக்கிரமிப்பு எதுவும் அகற்றப்படவில்லை. புதிய அடுக்குமாடி வீடு கட்டும் பணி முடிந்து, வீடு ஒதுக்கீடு செய்யும் போது, மீதியுள்ள ஆக்கிரமிப்பாளருக்கு வீடு வழங்கி, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்படும். குறிப்பாக, அதிக வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடம்பெயர செய்ய, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.- மாநகராட்சி அதிகாரிகள்.