மேலும் செய்திகள்
சிவில் நீதிமன்றமா; சமாதானமா? ராமதாசுக்கு இருப்பது இரண்டே வழி
28 minutes ago
சென்னை: 'ஜாதி ஒழிப்பே, தி.மு.க.,வின் நோக்கம்' என பேசி வரும், துணை முதல்வர் உதயநிதி, சமூக நீதி மாநாட்டில் வார்த்தைக்கு வார்த்தை ஜாதி பெயரை உச்சரித்தது, கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ராஜ் கவுண்டர் என்பவர் தலைமையிலான, 'புதிய திராவிட கழகம்' என்ற அமைப்பின் சார்பில், ஈரோடு மாவட்டம், எழுமாத்துாரில் 'வெல்லட்டும் சமூக நீதி' என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 30ம் தேதி மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, 'ஈ.வெ.ராமசாமியின் சமூக நீதி மண்ணான ஈரோட்டில், ராஜ் கவுண்டர் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்' என்றார். உதயநிதி பேசிய 25 நிமிடங்களில், 19 முறை ராஜ் கவுண்டர் என, வார்த்தைக்கு வார்த்தை உச்சரித்தார். அவர் பேசிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழகத்தில் பெயருக்கு பின்னால், ஜாதி பெயரை மக்கள் பயன்படுத்தாததற்கு, ஈ.வெ.ராமசாமியின் திராவிட இயக்கம் தான் காரணம் என, தி.மு.க.,வினர் பெருமை பேசுவதுண்டு. அரசியலுக்கு வந்தது முதல், உதயநிதியும் தொடர்ந்து இதை பேசி வருகிறார். ஜாதிகளை ஒழிப்பதுதான் தங்கள் லட்சியம் என பேசியுள்ளார். ஆனால், ஈரோட்டில் நடந்த சமூக நீதி மாநாட்டில், வார்த்தைக்கு வார்த்தை ஜாதி பெயரை உச்சரித்துள்ளார். இதுதான் தி.மு.க.,வின் சமூக நீதியா என, சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், தி.மு.க., தோல்வி அடைந்தது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலத்தில், அதிக இடங்களில் வெற்றி பெற, தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, ஏற்கனவே தி.மு.க.,வில் இருந்த ராஜ் கவுண்டர் நடத்திய நிகழ்ச்சியில், உதயநிதி பங்கேற்றுள்ளார். இந்த மாநாடே தி.மு.க.,வின் ஏற்பாடுதான். கவுண்டர் சமுதாய ஓட்டுகளைப் பெறுவதற்காக, சமூக நீதி மாநாட்டில் ஜாதி பெயரை உச்சரித்துள்ளார். ஓட்டு வங்கி அரசியலுக்காக, தி.மு.க., எதையும் செய்ய தயங்காது என்பதை, மீண்டும் ஒருமுறை உதயநிதி நிரூபித்துள்ளார் என, கடுமையாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பா.ஜ.,வினர், 'ஓட்டுக்காக கொங்கு மண்டல மக்களை, குறிப்பாக கவுண்டர் சமுதாய மக்களை ஏமாற்ற, உதயநிதி நடத்தும் நாடகமே, இதுபோன்ற பேச்சு. இதை கண்டு கொங்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்' என, பதிலடி கொடுத்து வருகின்றனர்.
28 minutes ago