சென்னை: போக்குவரத்து துறைக்கும், காவல் துறைக்கும் இடையேயான மோதல், 'கட்டிப்பிடி ஷோ' உடன் முடிவுக்கு வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த, முதல்வர் அறிவிப்பை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை, அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.கடந்த 2021ல் காவல் துறை மானிய கோரிக்கையின் போது, சட்டசபையில் சில திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அதில், 20வது அறிவிப்பாக, 'காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை, தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து, பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம். இதற்காக, நவீன அடையாள அட்டை வழங்கப்படும்' என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.அதே ஆண்டு டிச., 24ல், அப்போதைய உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதினார். அதில், முதல்வர் அறிவிப்பை குறிப்பிட்டு, காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை, அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்ய வசதியாக, 'ஸ்மார்ட் கார்டு' வழங்குமாறு அறிவுறுத்தினார். என்ன காரணமோ தெரியவில்லை, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படவில்லை. முதல்வர் அறிவிப்பும் செயல்பாட்டிற்கு வரவில்லை.இந்நிலையில் தான், கடந்த 21ம் தேதி, நாகர்கோவிலில் இருந்து துாத்துக்குடி சென்ற அரசு பஸ்சில், சீருடையுடன் பயணித்த காவலர் ஆறுமுக பாண்டியிடம், கண்டக்டர் சகாயராஜ், டிக்கெட் எடுக்கும்படி கூற, அவர் மறுக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ வெளியாகி, இருவருக்கும் இடையிலான மோதல், இரு துறைகளுக்கு இடையிலான மோதலாக உருவெடுத்தது.இப்பிரச்னை வெடித்ததும், தமிழ்நாடு காவலர் குடும்ப நல கூட்டமைப்பு மாநில பொதுச்செயலர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள், 'காவலர்கள் அதிக துார பயணங்களுக்கு, பஸ் வாரன்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளூர் பயணத்தில், தினசரி பல இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில், பஸ் வாரன்ட் சாத்தியம் இல்லை. எனவே, காவலர்களுக்கான இலவச பஸ் பயணம் குறித்த முதல்வர் அறிவிப்பை, உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என்று, முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.பிரச்னை பெரிதான நிலையில், நேற்று முன்தினம் உள்துறை செயலர் அமுதா, போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி சந்தித்து பேசினர். அதன்பின், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, திரைக்கதை உருவாக்கப்பட்டு, மோதலுக்கு காரணமான ஆறுமுகபாண்டி, சகாயராஜ் கட்டிப்பிடி ஷோ படமாக்கப்பட்டு, பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இருவரும் சமாதானமான வீடியோ வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, முதல்வர் அறிவித்தபடி, காவல் துறையினர் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திற்குள், பஸ்களில் இலவசமாக பயணிக்க தேவையான நடவடிக்கைகளை, அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். எனவே, போக்குவரத்து பணியாளர்கள் - காவல் துறையினர் மோதலுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும், நிரந்தர தீர்வு காணப்படும் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.
அரசாணை போடலை; நிதியும் ஒதுக்கலை
டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:காவலர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக, உள்துறை செயலர் கடிதம் எழுதியதும், அப்போது டி.ஜி.பி.,யாக இருந்த சைலேந்திரபாபு, மாவட்ட எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், காவலர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும்படி கூறியிருந்தார். ஆனால், அரசாணையும் வெளியிடவில்லை; நிதி ஒதுக்கவில்லை; இதனால் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. தற்போது, இந்த விவகாரத்தில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.