சென்னை: 'தேர்தல் கமிஷனின் விதிகள், தெரியாமல், த.வெ.க., தலைவர் விஜய் குறை கூறுகிறார்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள த.வெ.க., இன்று போராட்டம் நடத்த உள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: கொஞ்சம் ஏமாந்தால், ஓட்டுரிமை இல்லாத நிலை வந்தாலும் வரலாம். முதல் முறை வாக்காளர்கள், அதற்கான படிவம் 6ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இறந்தவர்கள், போலி வாக்காளர்களை நீக்குதல், முதல் முறை வாக்காளர்கள், ஓட்டு இல்லாதவர்களை சேர்த்தல் போன்ற பணிகளை செய்தால் போதுமானது. ஏற்கனவே பட்டியலில் உள்ள, 6.36 கோடி வாக்காளர்களை, மீண்டும் எதற்காக விண்ணப்பிக்க சொல்ல வேண்டும். மொத்தம் உள்ள, 6.36 கோடி வாக்காளர்களுக்கும் படிவங்கள் கொடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறும் பணிகளை, ஒரு மாதத்தில் எப்படி முடிக்க முடியும். ஓட்டுச்சாவடி அலுவலர் வரும்போது வீட்டில் இல்லை என்றால் என்ன செய்வது; முதல்முறை வாக்காளர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., படிவங்கள், த.வெ.க.,வினருக்கு கொடுக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது: முதல் முறை வாக்காளர்கள், ஓட்டு இல்லாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், இறந்தவர்கள், முகவரி மாறி சென்றவர்கள் பெயர்களை நீக்கவும், எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு திருத்தப் பணி, 10 அல்லது 15 ஆண்டுகள் என, குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். போலி வாக்காளர்களை நீக்க, இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் சேர்க்கப்படுவர். இதற்காக, தற்போது வாக்காளர் கணக்கெடுப்பு படிவம், வீடுதோறும் வழங்கப்படுகிறது. அப்படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்ட பின், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், விடுபட்டோரை சேர்க்க வாய்ப்பு வழங்கப்படும். விதிகள் தெரியாமல், தற்போதே படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்கும்படி, விஜய் கூறியுள்ளார். ஓட்டுச்சாவடி அலுவலர்களால், யார் த.வெ.க.,வில் உள்ளனர் என்பதை கண்டறிய முடியாது. எனவே, த.வெ.க.,வினருக்கு மட்டும் விண்ணப்பம் வழங்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு அவர்கள் கூறினர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு தேர்தல் கமிஷன் நடத்தும் ஆலோசனை கூட்டங்களுக்கு த.வெ.க.,வையும் அழைக்க வேண்டும் என, தலைமை தேர்தல் கமிஷனர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு விஜய் நேற்று கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தேர்தல் கமிஷன் நடத்தும் கூட்டங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே அழைக்கப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் நுாற்றுக்கணக்கில் இருக்கும். அவர்களை அழைப்பது நடைமுறை சாத்தியமல்ல. இதை விஜய் உணர வேண்டும்' என்றார்.