என்னங்க... என்று சமையலறையில் நின்று இல்லத்தரசி சொன்னால், மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்று அர்த்தமாம். பொருட்கள் வாங்கி வந்த பின் சரி பார்த்து, என்னங்க... என்று சொன்னால், விலை அதிகமாகி விட்டதே என்று அர்த்தமாம். மளிகை பொருட்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது. இல்லத்தரசிகள் மத்தியில் எண்ணெயில் கடுகு போடாமலேயே வெடித்து வருகிறது.காய்கறிகளின் விலை திருப்தியளிக்கும் வகையில் இருந்தாலும், ஒரு சில மளிகை பொருட்கள் மற்றும் எண்ணெய் வகைகளின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் ஒரு சில அரசியல் கட்சிகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து, பொது வெளியில் பேசுகின்றனர். உணவு பாதுகாப்பை அதிகரிக்க, மத்திய, மாநில அரசுகள், குளிர்சாதன வசதி மட்டுமின்றி சாதாரண கிடங்குகள் அமைக்க, 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மானியம் வழங்கியதால், ஏராளமான கிடங்குகளில், உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதே விலை உயர்வுக்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது.இதுகுறித்து, கோயமுத்துார் மளிகை வியாபாரிகள் சங்க துணை தலைவர் கணேசன் கூறியதாவது: நாட்டில் ஒவ்வொரு உணவுப்பொருளும் ஆறு மாதங்களுக்கு தேவையான அளவில் இருப்பு இருக்கும். சில நேரங்களில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவது வழக்கம். இதை தடுத்தால், விலை உயர்வை 15 நாட்களில் நிச்சயம் கட்டுப்படுத்தலாம். பதுக்கலை கட்டுப்படுத்தி விலையை குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.கடந்தாண்டு, காய்கறி வகைகள், மக்கள் கைகளுக்கு போய் சேர்வதற்குள், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இப்போது, தேவைக்கு அதிகமாகவே காய்கறி வரத்து உள்ளது; பிரச்னை இருக்காது என, காய்கறி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கடந்தாண்டு சின்ன வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு, 150 ரூபாய்க்கும், தக்காளி, கேரட், பீன்ஸ் ஆகியவை, கிலோ ஒன்றுக்கு தலா 100 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது, அதிக விளைச்சல் காரணமாக, வழக்கம் போல் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது.இதுகுறித்து, கோவை டி.கே.மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: கடந்த ஆண்டு காய்கறி விளைச்சல் போதுமானதாக இல்லை. டிமான்ட் அதிகரித்து விலை உச்சத்துக்கு போனது. சின்ன வெங்காயத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. கிலோ 150க்கு விற்றது. தக்காளி, கேரட், பீன்ஸ் ஆகியவை 100க்கும், அவரை, உருளை கிழங்கு ஆகியவை 80 ரூபாய் வரை விற்றது. இதே போன்று மற்ற காய்கறி விலையும் உயர்ந்து, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.நாடு முழுக்க உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், விளைநிலங்களுக்கு நேரடியாக சென்று, ஒட்டு மொத்தமாகஉணவு தானியங்கள் முதல் காய்கறி வரை மொத்த கொள்முதல் செய்து அதிகளவு இருப்பு வைத்து வர்த்தகம் செய்வதால், இது போன்ற தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படுகிறது என்கின்றனர் வியாபாரிகள்.