அடுத்த டேப் ரிலீஸ் ஆன பின் அரசியலில் இருப்பாரா டி.ஆர்.பாலு?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஒன்பதாவது 'டேப்' வெளியாகும்போது, தி.மு.க., - எம்பி., டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம்,'' என்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., 21 சதவீதம் ஓட்டுகளை வாங்கும் என, கணிப்புகள் வருகின்றன; கட்சி முன்னேறி இருக்கிறது.வளர்ச்சி
கட்சி தொண்டர்கள் தங்களுடைய வேலைகளை அமைதியாக செய்து வருகின்றனர். மக்கள் பா.ஜ., நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டனர். லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி தான் வெற்றி பெற போகிறார். 189 தொகுதிகளை, என் யாத்திரை கடந்து விட்டது. கூட்டணியை பொறுத்தவரை, வண்டியை குதிரை தான் இழுக்க வேண்டும்; குதிரையை வண்டி இழுக்க முடியாது. இது, பா.ஜ.,வை பலப்படுத்தி கொள்ள வேண்டிய நேரம். கூட்டணி வண்டி மாதிரி. கூட்டணி கட்சிகள், பா.ஜ.,வை இழுக்கும் என நினைக்கக்கூடாது. பா.ஜ., வளர்ந்து உள்ளது. முழுமையாக நான்கு வாரங்கள் உள்ளன. மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்பு வரலாம். கட்சியை பலப்படுத்த முழு மூச்சாக உயிரை தந்து இறங்கி உள்ளோம்.கூட்டணி அமைந்து விடும். கூட்டணி கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன. வலிமையான நாடு வேண்டும்.அற்புதமான தமிழகம் வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மீது, 70 சதவீதம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என, எல்லா கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. இவற்றின் வெளிப்பாடு, லோக்சபா தேர்தலில் தெரியவரும்.என்னுடைய பாதயாத்திரையின் 200வது தொகுதி பயணத்தின் போது, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வருகிறார். 234வது தொகுதிக்கு, பிரதமர் மோடி வர இருக்கிற தேதி அறிவிக்கப்படும். சென்னையில் யாத்திரை செல்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். மக்களின் எண்ணமாக வரக்கூடிய கருத்துக் கணிப்புகளை பார்க்கும்போது, சந்தோசமாக இருக்கிறது. வரலாறு காணாத வகையில் பா.ஜ., வெற்றி பெறும். ஜாதி வன்மம்
பார்லிமென்டில் அமைச்சரை மோசமான வார்த்தையில் பேசுவதில் இருந்து, தி.மு.க., மூத்த தலைவர்களின் ஜாதி வன்மம் வெளிப்படுகிறது.அரசியல் சாமானிய மக்களை நோக்கி செல்வதை, டி.ஆர்.பாலு புரிந்து கொள்ள வேண்டும். டி.ஆர்.பாலுவுக்கு இன்னும் இரண்டு 'டேப்' உள்ளது. டி.ஆர்.பாலு பேசியது ஆணவத்தின் உச்சம். வயது வேறு, ஆற்றல், திறமை வேறு. டி.ஆர்.பாலு வயதானதால், பெரிய அரசியல்வாதி என நினைத்தால் தவறு.டி.ஆர்.பாலு எதை பேசினாலும், அண்ணாமலையோ, பா.ஜ.,வோ கைகட்டி கேட்க வேண்டும் என்றால், அது மிராசுதாரர்தனம். அவர் மிராசுதாரர் அல்ல. அவரிடம் வேலை பார்க்கும் கொத்தடிமை கூட்டம் நாங்கள் அல்ல. அடுத்து, '2ஜி ஊழல் பைல் ஒன்பதாவது டேப்' வெளியான பின், டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.