உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு புத்துயிர் கிடைக்குமா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு புத்துயிர் கிடைக்குமா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் சென்னை - புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை, திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை ஆகிய முக்கிய ரயில் பாதை திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நிலையில், விரைந்து முடிக்க வேண்டும் என, ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலுார் புதிய ரயில் பாதை, திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீடு சிக்கல்களே, காரணமாக கூறப்படுகிறது. சென்னை- கடலுார் பாதை சென்னையிலிருந்து கடலுார் வரையில் 178 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதை அமைக்க 2008 ம் ஆண்டு திட்டமிப் பட்டது. இத்திட்டத்திற்கு, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் பா.ம.க.,வை சேர்ந்த வேலு முயற்சியால், ரூ. 523 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படாததால் திட்டம் 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பா.ம.க., உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து வலியுறுத்தியதால் திட்டம் மீண்டும் உயிர்பெற்றது. ஆனாலும், திட்டத்தை தெற்கு ரயில்வே துறை செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. திண்டிவனம் - திருவண்ணாமலை பாதை இதேபோல், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு 10 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது. அத்துடன், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதியும் ரத்து செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக இதுவரை ரூ.72.87 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை கைவிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த இரு திட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்திற்கான புதிய ரயில் பாதை திட்டங்கள் தொடர்ந்து கைவிடப்படுவது, பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என மாநில அரசு தரப்பிலும், தேவையான நிலங்களை கையகப்படுத்தித் தர மாநில அரசு உரிய அக்கறை செலுத்தவில்லை என மத்திய அரசு தரப்பிலும், பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் வீசப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், தமிழகத்திற்கு ரயில்வே துறை மூலம் எவ்வித முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை. தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் நலனை கருத்தில் கொண்டு, ரயில்வே துறை திட்டங்களை விரைந்து கொண்டு வர அனைத்து கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை தமிழக வளர்ச்சிக்கான ரயில்வே துறை புதிய திட்டங்களை, அப்போது, மத்திய அரசில் இடம்பெற்ற பா.ம.க., இணை அமைச்சர்கள் பெற்றுத் தந்தனர். கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தி.மு.க.,- காங்., கட்சியினர் மத்திய அமைச்சரவையில் இருந்தும், திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டபோது, மத்திய அரசிடம் பா.ம.க., போராடி, திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. தர்மபுரி - மொரப்பூர் திட்டத்திற்கு, 2019ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டும், நிலங்கள் கையகப்படுத்தவில்லை. ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவது, மத்திய அரசின் பணி மட்டும் அல்ல. மாநில அரசும் ஆர்வம் காட்ட வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., கூட்டணி, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, அம்மாநிலத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து கொண்டு வர முயற்சி எடுத்துள்ளார். அம்மாநிலத்தில், 9 திட்டங்களுக்கான மதிப்பீட்டு தொகை ரூ.16,235 கோடியில், 60 சதவீத தொகையான ரூ. 9,847 கோடியையும், 7 திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி அதற்கான செலவு முழுவதையும் கர்நாடக அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். தமிழகத்தை ஆளும் விளம்பர மாடல் அரசு அதற்கெல்லாம் தயாராக இல்லை. மத்திய அரசுடன் பேசி, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து, திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - அன்புமணி, பா.ம.க., தலைவர், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் நிதி ஒதுக்குவதில் மத்திய பாரபட்சம் இந்தியாவில், ரயில்வே திட்டங்கள் அதிகமாக தேவைப்படும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. எனவே, சென்னை - கடலுார், திண்டிவனம் - திருவண்ணாமலை, ஆகிய புதிய ரயில் பாதைத் திட்டங்களை கிடப்பில் போடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அத்திட்டங்களுக்கு உடனடியாக போதிய நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய ரயில்பாதை திட்டத்திற்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதி, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்காக இதுவரை ரூ.72.87 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை கைவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ரயில்வே துறையின், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்கிறது. ரயில்வேத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது. ஆனால், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில், மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டுவது வேதனை அளிக்கிறது. -செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர். --- தி.மு.க., ஆட்சியாளர்கள் முயற்சி எடுக்கவில்லை தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும்; மாநிலத்திற்கு புதிய ரயில் பாதைத் திட்டங்கள் தேவை என்ற அவசியத்தை, தி.மு.க., அரசு உணர தவறிவிட்டது. புதிய திட்டங்களுக்கான நிலங்களை கையகப்படுத்தி தருவதுடன், திட்ட செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் 13 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெற்றோம். மத்திய அரசிடம் நிதி பெற்று மருத்துவக் கல்லுாரிகள் உள்ளிட்ட, பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தோம். அப்போது, மத்திய அரசிடம் பணிந்து போவதாக அரசியலுக்காக தி.மு.க., தரப்பில் தேவையற்ற விமர்சனம் செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. பிரதமரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை தி.மு.க., ஆட்சியாளர்கள் செய்யவில்லை. லோக்சபாவில் தி.மு.க., மற்றும் கூட்டணி சார்பில் அழுத்தம் கொடுத்து, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதியை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். - சி.வி.சண்முகம். எம்.பி., அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் --- தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை மத்தியில் 2004-1014 வரையிலான காங்.,-தி.மு.க., ஆட்சியில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய பா.ஜ., ஆட்சியில், தமிழகத்திற்கு கடந்த 2024 ம் ஆண்டு மட்டும், ரூ. 6,170 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் 57 ரயில் நிலையங்கள் புனரமைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 11 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது. தமிழகத்திற்கு பத்து வந்தே பாரத், ஒரு அமீர் பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. பிற மாநிலங்களைபோல், தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் ரயில்வே துறைக்கு 2,800 ஹெக்டர் நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்தி தர வேண்டிய நிலையில், 30 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள நிலத்தை மாநில அரசு கையகப்படுத்திக் கொடுத்தால், திட்டங்களை விரைந்து முடிக்க காத்திருப்பதாக, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அறிவித்தார். இதற்கு பின், நான்கு மாதமாகியும் பணிகள் வேகம் எடுக்கவில்லை. மத்திய அரசு மீது புகார் சொல்வதை கைவிட்டு, ஏற்கனவே இருந்த முதல்வர்களை பின்பற்றி, தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர மாநில அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். -ஏ.ஜி.சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழக பா.ஜ., துணைத் தலைவர் தமிழகத்திற்கு ரயில்வே துறை துரோகம் மத்திய ரயில்வே துறை, தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களையும் தற்போதைய பா.ஜ., அரசு ரத்து செய்து வருகிறது. தேஜாஸ் ரயிலை விழுப்புரத்தில் நிறுத்த 6 ஆண்டுகளாக போராடி வருகிறேன். இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. திருப்பதி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸை திருக்கோவிலுார் மற்றும் உளுந்தூர்பேட்டையில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இந்தியாவில் முதன் முதலாக ரயில் பாதை அமைக்கப்பட்ட போதே, தமிழகத்தில் ரயில் சேவை துவக்கப்பட்டது. அப்படியிருந்தும் கூட தமிழகத்தில் ரயில் போக்குவரத்து சேவையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்கு விற்று வருகின்றனர். இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரயில் சேவையே காணாமல் போய்விடுமோ என்கிற அச்சம் எழுகிறது - ரவிக்குமார், எம்.பி., வி.சி., பொதுச்செயலாளர் ------ (6) மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் தமிழகத்தில் மட்டும் புதிய ரயில்கள் மற்றும் ரயில் பாதை திட்டங்கள் தொய்வில் உள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலுார் வரையிலான புதிய ரயில் பாதை, திண்டிவனம்- திருவண்ணாமலை -நகரி ஆகிய புதிய ரயில் பாதை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தமிழக அரசால் முறையான அனுமதி வழங்கியபோதும், 23 ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது, விழுப்புரம்-தஞ்சாவூர் ரயில் பாதை இரட்டிப்பு பணிகளும் தொய்வு நிலையில் இருக்கிறது. நான் ஆரணி எம்.பி.,யாக இருந்தபோது திருவண்ணாமலை- நகரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு முறையாக நிலங்களை வருவாய்த்துறையின் மூலம் கையகப்படுத்தி, தெற்கு ரயில்வே மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டும், இன்றளவும் கிடப்பில் இருக்கிறது. மதுரை-துாத்துக்குடி, ஈரோடு-பழனி ஆகிய புதிய ரயில் பாதை திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தெற்கு ரயில்வேயின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இது, தமிழக மக்களுக்கு ரயில்வே துறை செய்யும் அப்பட்டமான துரோகம். இத்திட்டங்களுக்கு போதிய நிதியை விரைவில் ஒதுக்கி, கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைவில் முடிக்க மத்திய அரசு முன் வர வேண்டும். -டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி., தமிழக காங்., செயல் தலைவர் -நமது சிறப்பு நிருபர்- .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

jkrish
அக் 02, 2025 20:41

தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் ரயில் திட்டங்களுக்கு மாதம் ஒரு முறை கலந்து ஆலோசித்து தேவையான ஆணைகள் பிறப்பிக்க வேண்டும். இதெல்லாம் நமக்கு தோன்றுகிறது அவர்களுக்கு தோன்றாமல் இருக்குமா? எல்லாம் அரசியல் எதிலும் அரசியல்.


N Sasikumar Yadhav
அக் 02, 2025 14:09

சுயநலம் பிடித்த தமிழக மக்கள் ஓஷி இலவசம் ஆயிரம் ஐநூறு என வாங்கி கொண்டு விஞ்ஞான ரீதியான ஊழல்வாத திராவிட கும்பல்களுக்கு ஓட்டுப்போட்டால் வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும் . பூடான் சிக்கிம் என மலைபிரதேசங்களுக்கு ரயில்பாதை அமைக்கிற மத்திய மோடிஜி அரசுக்கு தமிழகத்தில் செயல்படுத்த எவ்வளவு நேரம் பிடிக்கும் . தமிழகத்திற்கு கொடுக்கிற திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதும் சாலை ரயில் துறைமுகம் போன்ற திட்டங்களுக்கு தலித் மக்கள் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என நீலிகண்ணீர் விடுவது என திருட்டு திமுக நாடகம் நடத்துகிறது


Gopalan
அக் 02, 2025 10:23

None of the trains which were stopped due to gauge conversion from metre to broad have been restored from Coimbatore down south even after several years. Hope the authorities in Southern Railway HQ in Chennai wake up and the state authorities will give them a wake up call.


KOVAIKARAN
அக் 02, 2025 09:25

தமிழகத்தில் ரயில் வருவத்தைப்பற்றியோ, புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும், அதனால் அதிகமான ரயில்கள் வந்து பயணிகளின் பிரயாணத்திற்கு நன்மை பயக்கவேண்டும் என்று தீய திமுக என்றுமே நினைத்ததில்லை. திமுக மட்டுமல்ல, அவருடன் கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியினருக்கும், அக்கறை இல்லை. இங்கே வாய்கிழிய பேசும், ரவிக்குமார் MP, அங்கே பாராளுமன்றத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்? அங்கே அவர்கள் செய்வதெல்லாம், பொய்பேசுவது, மோடியை குறை சொல்வது மட்டுமே. நமது தமிழகத்தில், மக்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய 39 உறுப்பினர்களும் தமிழகத்தில் புதிய ரயில் பாதைகளைப்பற்றியோ, அல்லது புதிய ரயில்களை ஆரம்பிப்பது பற்றியோ, என்றைக்காவது பேசியதுண்டா? நிச்சயம் இல்லை. இப்போது ஏன், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை, தமிழகத்தை புறக்கணிக்கிறது, என்று குறை சொல்லவேண்டும்? நமது மக்கள் திருந்தவேண்டும். பாராளுமன்றத்தில், நமது மாநிலத்தின் நலனுக்காக பேசி, வாதாடுபவர்களையே தேர்ந்தெடுக்கவேண்டும்.


அப்பாவி
அக் 02, 2025 09:23

பழனி திருப்பூர் பாதை வந்தால் நன்றாக இருக்கும்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 02, 2025 08:59

எத்தனை புதிய திட்டங்களை அறிவித்தாலும் கோவைக்கு எந்த திட்டமும் இருக்கக் கூடாது, கோவைக்கு எதுவும் நன்மை செய்துவிடக்கூடாது என்பதில் கடைசி வரை உறுதியாக நிற்க வேண்டும்.


Arul Narayanan
அக் 02, 2025 06:27

மற்ற மாநிலங்களில் எல்லாம் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஏற்படுத்துவதற்கு என்று தனி வாரியம் அமைத்து செயல் படுகின்றன. தமிழ்நாட்டில் அந்த மாதிரியான எவ்வித முனைப்பும் இல்லை என்பது மிக முக்கியமான காரணம். மத்திய அரசை மட்டுமே குறை சொல்வது திசை திருப்பும் செயல். அதை இந்த செய்தியில் அழுத்தமாக தெரிவித்து இருக்க வேண்டும்.