புதுச்சேரி : புதுச்சேரியில், 5 பேரிடம் ரூ.11.92 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் நாராயணன். இவரை மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு, பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என கூறி உள்ளனர். இதை நம்பி நாராயணன், மர்ம நபர்கள் கொடுத்த 'ஆப்'பில், ரூ.3.69 லட்சம் முதலீடு செய்தார்.இதைத்தொடர்ந்து அவர் லாபத்தை எடுக்க முயன்ற போது, கூடுதல் பணம் கட்ட வேண்டும் என்று அந்த 'ஆப்'பில், கூறப்பட்டது. அதன் பிறகே, அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிந்தது. அதேபோல, ரெயின்போ நகரை சேர்ந்த சஞ்சய் என்பவரும் மர்ம நபர் கொடுத்த, 'லிங்க்' மூலம் பங்கு சந்தையில், முதலீடு செய்து, ரூ.3.90 லட்சத்தை இழந்துள்ளார்.மேலும், காரைக்கால் பகுதியை சேர்ந்த கோமதியை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்த படி, ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி உள்ளார். இதை நம்பி, கோமதியும், ரூ.2.90 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.இதேபோல, மாகி பகுதியை சேர்ந்த வலசுராஜன் என்பவரும், ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என நம்பி, ரூ.1.30 லட்சம் முதலீடு செய்து, மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.தொடர்ந்து திருபுவனை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர், 'ஆப்' மூலம் லோன் பெற்றுள்ளார். பின்னர், அவர் பெற்ற லோனை, வட்டியுடன் சில தினங்களுக்கு முன்பு அடைத்துள்ளார். அப்போது மர்ம நபர், விஜயகுமாரை தொடர்பு கொண்டு, அவரின் புகைப்படங்களை மார்பிங் செய்து கூடுதல் பணம் அனுப்புமாறு மிரட்டி உள்ளார்.அதற்கு பயந்து, விஜயகுமார், ரூ.13 ஆயிரத்தை மர்ம நபர், அனுப்பி உள்ளார். இந்த 5 பேரும், ரூ.11.92 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இந்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.