| ADDED : ஜூன் 20, 2024 09:06 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் உட்பட 5 பேரிடம் 6.33 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். திருக்கனுார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர் 4.91 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடித்து, சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாமல் ஏமாந்தார். முதலியார்பேட்டையை சேர்ந்த மகேஸ்வரி. இவரது வங்கி கணக்கில் இருந்து 71 ஆயிரம் ரூபாயை அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளனர். இவரை அடுத்து, முத்தியால்பேட்டையை சேர்ந்த பாவனாவிடம் , மர்ம நபர் ஒருவர் வங்கி அதிகாரி போல பேசி கே.ஒ.சி., புதுப்பிக்க வேண்டும் அதற்கான வங்கி விபரங்களை கொடுத்து, மொபைலுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை கொடுத்துள்ளார். அடுத்த நிமிடத்தில், அவரது கணக்கில் இருந்து 19 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. அதே போல, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர், டெலிகிராம் குருப்பில் ஐ போன் வாங்குவதற்கு முன்பணமாக 18 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். தொடர்ந்து, புதுச்சேரி சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இளமாறன், வங்கியில் கடன் வாங்கி அதனை அடைத்துள்ளார். மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, வங்கி கடன் தொடர்பாக கூடுதல் பணம் கட்ட வேண்டும் இல்லை என்றால் மார்பிங் செய்த புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டனார். பயந்த அவர் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி ஏமாந்தார். இதுபற்றி, 5 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.