| ADDED : ஜூன் 12, 2024 02:07 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா ஆரோவில் பஸ் நிலையத்தில் கடந்த 10.3.2023ம் தேதி, கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் 1.5.2023ல் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களும், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் 20.7.2023ம் தேதி ஆர்ப்பாட்டம், கோலியனூரில் 16.9.2023ம் தேதி பொதுக் கூட்டம் நடந்தது.இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.இந்த 4 வழக்குகளும், நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சண்முகம் ஆஜரான சார்பில், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள், 'ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதி வழக்குகளை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய பஸ் நிலையத்தில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோலியனூரில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், இன்னும் சம்மன் வரவில்லை' என, பதிலளித்தனர். விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இந்த 4 வழக்குகளின் விசாரணையை வரும் ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.