| ADDED : ஆக 08, 2024 11:09 PM
புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்வியில் அரசின் உள் ஒதுக்கீடு பெற திருத்த அரசாணையை முதல்வர் வெளியிட வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பேசினார்.புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில், பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி அரசை கண்டித்து, அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரவி பாண்டுரங்கன், இணைச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, பேசியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் நான்கு நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூலம் எந்தவிதமான நன்மையும் இல்லை.கடந்த, 2019ம் ஆண்டில் மத்திய மருத்துவ கவுன்சில் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், 50 சதவீத இடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என, ஆணையிட்டது. ஆனால் இதையும் அரசு செய்யமுன்வரவில்லை.நம் மாநிலத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தவிர்த்து, 3 தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்த மூன்று மருத்துவ கல்லுாரிகளிலும் மொத்தம், 650 இடங்கள் உள்ளன. தேசிய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி 50 சதவீத 325 இடங்களை அரசு பெற வேண்டும்.இந்தாண்டு தனியார் மருத்துவ கல்லுாரியில், 50 சதவீத இடங்களை அரசின் இடங்களாக பெற கவர்னரை சந்தித்து மனு அளிக்கப்படும்.6ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் அரசின் உள் ஒதுக்கீடு பெற தகுதி உடையவர் என, திருத்த அரசாணையை முதல்வர் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்பேசினார்.