| ADDED : ஆக 10, 2024 04:58 AM
புதுச்சேரி: உயர்கல்வியில் பிராந்தியஇடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க., கவர்னரிடம் மனு அளித்தது.புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், கட்சி நிர்வாகிகளுடன் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்த மனுவில்;ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்புகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாட பிரிவுகளிலும் 25 சதவீத உள் ஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்களில் 50 சதவீதம் மாநில அரசுக்கு வழங்க வேண்டும். தனியார் மருத்துவ கல்லுாரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் உள் ஒதுக்கீடு, 1 முதல் பிளஸ் வரை இருப்பதை, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்றால் வழங்கலாம் என மாற்ற வேண்டும்.தேசிய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும்.எந்த மாநிலத்திலும் இல்லாத 25 சதவீத பிராந்திய உள்ஒதுக்கீடு புதுச்சேரி உயர்கல்வியில் வழங்கப்படுகிறது. புதுச்சேரி பிராந்திய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என, கூறப்பட்டு இருந்தது.