| ADDED : ஜூலை 24, 2024 06:26 AM
பாகூர் : பாகூரில் சாராயக்கடை இயங்கி வந்த இடத்தில், அங்கன்வாடி மையம் அமைத்திட கோரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அங்கன்வாடி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.பாகூர் ஏரிக்கரை வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கான அங்கன்வாடி மையம் வாடகையில் இயங்கி வருகிறது. கர்ப்பிணி, தாய்மார்கள், குழந்தைகள் பயன் பெரும் வகையில், அங்கன்வாடி மையத்திற்கு அரசு கட்டடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், ஏரிக்கரை வீதி நுழைவு வாயில் பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த சாராயக்கடை விற்பனை உரிமம் காலவதியான நிலையில், அந்த கொட்டகை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மீண்டும் அந்த இடத்தில் சாராயக்கடை அமைக்க கூடாது எனவும், அங்கன்வாடி மையத்திற்கு கட்டடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காலியாக உள்ள அந்த இடத்தில், அங்கன்வாடி மையம் அமைத்திடக்கோரி, அரசின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், 'அங்கன்வாடி மையம்' என்ற பெயர் பலகையை, அப்பகுதி மக்கள் அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.