புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் செலவில்நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.அதனால், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாமல் இடம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அதையடுத்து, மார்ச் 22ம் தேதி முதல் பஸ் நிலையத்தை, தற்காலிகமாக ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்ற நகராட்சி முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கியது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அடிப்படை வசதிகள் ஏதும் ஏற்படுத்தாமல் புது பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்தப்பட்டதால் காலதாமதம் ஆனது.அதையடுத்து ஏ.எப்.டி.,திடலில் பயணிகளுக்கான நிழற்குடை அமைத்தல், குடிநீர், மின்வசதி உள்பட அனைத்து வசதிகளையும் முழு வீச்சில் நடந்து வந்தன. தற்போது இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு புது பஸ் நிலையம் தற்காலிகமாக இடம் மாற்ற முடிவு செய்து, புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நாளை (15ம் தேதி) நள்ளிரவு முதல் அனைத்து பஸ்களும்புது பஸ் நிலையத்திற்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் அன்று நள்ளிரவே ஏ.எப்.டி.,திடலுக்கு சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ன வசதிகள்
ஏ.எப்.டி., திடலில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு 40 அடி அகலம், 100 நீளத்தில்இரண்டு பிரமாண்டமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதிக்காக மூன்று இடங்களில் ஆர்.ஓ.,யூனிட் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையம் இருண்டு விடாமல் இருக்க உயர் மின்கோபுர விளக்கும், மைதானத்தில் பல்வேறு இடங்களில் ஒளி வெளிச்சத்தை பாய்ச்சும் மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்க்கிங்
ஏ.எப்.டி., பஸ் நிலையம் வரும் பயணிகள்தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்ய போதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டெம்போக்கள் வந்து செல்வதற்காக தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. முன் பதிவு
பி.ஆர்.டி.சி., எஸ்.இ.டி.சி.,டி.என்.எஸ்.டி.சி., ஆகிய போக்குவரத்து கழக பஸ்கள் முன் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மூன்று கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அலைச்சல் இல்லாமல் முன் பதிவு செய்யலாம். வருகிறது தடை
கடலுார் சாலை எப்போதும் பிசியாகவே இருக்கும் சூழ்நிலையில் ஏ.எப்.டி.,திடலுக்கு புது பஸ் நிலையம் மாற்றப்பட உள்ளதால் அச்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும்.எனவே வெங்கடா சுப்பா ரெட்டியார் சிலை முதல் ரயில்வே கேட் வரை உள்ள கடலுார் சாலையின் இரு பக்கங்களிலும் அனைத்து வகை வாகனங்களையும் பார்க்கிங் செய்ய தடை விதிக்க போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புது பஸ் நிலைய பணிகளை மூன்று மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்து, பணிகள்வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.