புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, 14 வகையிலான, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிப்பை கலெக்டர் வெளியிடவேண்டும், என வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.வர்த்தக சபை தலைவர் குணசேகரன் கூறியதாவது:இந்திய ரிசர்வ் வங்கி, 10 ரூபாய் நாணயங்கள் 2009 ஆண்டு புழக்கத்தில் வந்தது. நாணயங்கள் பல்வேறு வடிவமைப்புகளில் இருந்ததால், போலிகள் இருப்பதாகவும், செல்லாது எனவும் வதந்தி பரவியது.அதனால், இந்த நாணயங்களை கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டு நிறுவனங்களில் வாங்குவது மிக மிக குறைந்து நிறைய சிக்கல்கள் உருவானது.இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 14 வடிவிலான 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என, தெரிவித்து, அவைகளை வாங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது.ஆனாலும் நாணயங்களை வாங்க பலரும் தயங்கி வருகின்றனர். இதனால் புதுச்சேரி வணிகப் பெருமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வாடிக்கையாளர் பலர் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வணிகம் பாதிப்பதுடன், வணிகர்கள் பெரும் மன உளைச்சலை அடைகின்ற சூழல் தற்போது புதுச்சேரியில் உருவாகி உள்ளது.இதுபோன்ற சூழல் தமிழகத்தில் உருவான போது, அம்மாநில அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, உடனடியாக 14 வடிவில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள, 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும் என்றும் அதை வாங்க மறுப்பது குற்றம் என்றும், வாங்க மறுப்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம், 124 ஏ, வின் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடும்படி உத்தரவிட்டது.அதன்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பை வெளியிட்டு, அந்த சிக்கலுக்கு தீர்வு கண்டனர். அதனைப் போன்ற ஒரு பொது அறிவிப்பை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.