| ADDED : ஆக 16, 2024 05:46 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரம்மாண்டமாக உலக தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது; கல்வி, சுகாதாரம், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றில் புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. பிரதமர் மோடி ஆசியோடு எனது அரசு எடுத்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் விளைவாக புதுச்சேரி தனிநபர் வருமானம் ரூ. 2,63,068 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் நெற்பயிருக்கு ரூ.51.12 கோடிக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60,624 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நடப்பாண்டில் திறக்கப்பட்டு தனியார் பங்களிப்புடன் எத்தனால் மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கப்பட்ட விவசாய கடன் ரூ.13.36 கோடி தள்ளுபடி செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 6,500ல் இருந்து ரூ. 8,000 ஆகவும், மழைக்கால நிவாரணம் ரூ. 3,000ல் இருந்து ரூ, 6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறை உதவியுடன், புதுச்சேரி அரிக்க மேட்டில் ரோமன் சரக்கு கப்பல் மாதிரி வடிவில் விளக்க வழிகாட்டி மையம் அமைக்கப்படும். புதுச்சேரியில் மத்திய அரசின் டிஜிட்டல் ட்ரோன் சர்வே நடத்தப்பட்டு அனைத்து நில பகுதிகளுக்கும் தனித்துவமான நிலப்பகுதி அடையாள எண் வழங்கப்படும். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் ரூ.5.19 கோடி செலவில் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக, வளமாக, நலமாக வாழ்வதற்கு உகந்த சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதை கடுமையாகக் கொண்டு எனது அரசு செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.