துாய்மைப் பணி முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் துாய்மைப் பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை சார்பில், துாய்மைப் பணி முகாம் வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. இதன் துவக்க விழா சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை - காந்தி வீதி சந்திப்பில் நேற்று துவங்கியது. அமைச்சர் லட்சுமிநாராயணன் முகாமினை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து துாய்மைப் பணி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இப்பணியின் மூலம் நகரப் பகுதியிலுள்ள அனைத்து சாலைகள், பக்கவாய்க்கால்களை சுத்தம் செய்தல், சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்றுதல், அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் துார் வாருதல், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கீழ்நிலை நீர்த்தேக்கங்களை சுத்தம் செய்தல், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல், பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. துாய்மைப் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் 250 பேர் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம் உட்பட பலர் பங்கேற்னர்.