| ADDED : மார் 23, 2024 06:21 AM
பாகூர் : பாகூரில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.புதுச்சேரியில் இருந்து தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம் வழியாக பண்ருட்டி நோக்கி நேற்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை, கூனிச்சம்பட்டு மோகன்ராஜ் 33; என்பவர் ஓட்டிச் சென்றார்.பாகூர் ஏரிக்கரை அம்பேத்கர் சிலை சதுக்கம் அருகே சென்றபோது, டிரைவர் மோகன்ராஜிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது. பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.பின் பகுதியில் இருந்த கண்டக்டர் மங்கலம் பகுதியை சேர்ந்த அழகப்பன் பயணிகள் உதவியுடன் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.இதனிடையே, எதிரே வந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவர் திருப்பணாம் பாக்கம் ராம்ராஜ், சம்பவத்தை கண்டு, தான் ஓட்டி வந்த பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கி சென்று, சீட்டில் மயங்கிய நிலையில் இருந்த மோகன்ராஜை பயணிகள் உதவியுடன் மீட்டு, பயணிகள் சீட்டில் படுக்க வைத்தார். பின், அந்த பஸ்சை பாகூர் அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று, மோகன்ராஜை சேர்த்துவிட்டு, புறப்பட்டு சென்றார்.தலைமை மருத்துவர் ஆனந்தவேலு தலைமை யிலான மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு டிரைவர் மோகன்ராஜை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.