| ADDED : ஜூலை 14, 2024 03:50 AM
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேரில் கோப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது என, அனைத்து அரசு துறைகளுக்கும் நிர்வாக சீர்திருத்த துறை செக் வைத்துள்ளது.இந்தியாவில் தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இ-ஆபிஸ் மின் அலுவலக முறை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவலியல் மையம் உருவாக்கி செயல்படுத்துகிறது. இதனால் காகித முறை அல்லாமல் அனைத்தும் மின்னணு வழிமுறையில் அலுவலக செயல்களை வேகப்படுத்த முடியும்.மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு 'இ-ஆபிஸ்' எனும் மின் அலுவலக திட்டம் பரீட்சாத்தமாக ஓரிரு துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2018 ல் அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி துறை தலைவர்கள் மட்டும் டிஜிட்டல் கையொப்பத்துடன் இ-ஆபிஸ் திட்டத்தை அணுக உரிமை அளித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.கோப்புகளை கையாள யூ.டி.சி., எல்.டி.சி., உள்ளிட்ட அரசின் அடித்தள ஊழியர்களிடம் இ-ஆபிஸ் திட்டத்தை கொண்டு செல்லப்பட்டுள்ள சூழ்நிலையில் நிர்வாக சீர்திருத்த துறை அதிரடி முடிவினை எடுத்துள்ளது.ஆகஸ்ட் 1 ம்தேதி முதல் நேரில் கோப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், புதுச்சேரி அரசு அலுவலகங்களில் அனைத்து அரசு அலுவலகங்களில் நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்திற்காக இ-ஆபிஸ் திட்டம் கொண்டு வந்து நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.எனவே அனைத்து அலுவலக கோப்புகளையும் இ-ஆபிஸ் போர்ட்டல் வழியாகவே கையாளுவது அவசியமாகிறது. அனைத்து கோப்புகள், சர்வீஸ் விஷயங்கள், கன்பார்ம்மேஷன், நியமன விதிகள், சர்வீஸ் சம்பந்தமான சந்தேகங்கள் என அனைத்தையும் இனி இ-ஆபிஸ் போர்ட்டல் வழியாகவே அனுப்ப வேண்டும். அடுத்த மாதம் 1ம் தேதி முதல் நேரில் கோப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது என, அதிரடியாக தெரிவித்துள்ளது.