புதுச்சேரி: அனைத்து பள்ளிகளிலும் ஒலிம்பிக் தினம் கொண்டாடி, பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என, விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம் தெரிவித்துள்ளது.ஒலிம்பிக் போட்டி நாளை 26ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில், 196 நாடுகளை சேர்ந்த மொத்தம் 10,672 வீரர்கள், 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி துவங்குவதையொட்டி, புதுச்சேரி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.சுற்றறிக்கையில், புதுச்சேரி பள்ளிகளில் ஒலிம்பிக் தினம் கொண்டாட வேண்டும். ஒலிம்பிக் தினத்தன்று தங்களுக்கு பிடித்த ஒலிம்பிக் அணி சீருடையுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம். நட்பு ரீதியிலான ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட போட்டிகளை நடத்த வேண்டும்.ஒலிம்பிக் விளையாட்டுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். எனவே அவர்களது கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை திட்ட அறிக்கை சமர்ப்பிக்க சொல்ல வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்கும் நாடுகளின் பாரம்பரிய இசை, நடனம், காட்சி கலைகளை வெளிப்படுத்த வேண்டும்.இது தவிர, உள்ளூரில் உள்ள தடகள பயிற்சியாளர்கள் பள்ளிகளுக்கு அழைத்து விளையாட்டுகள் முக்கியத்துவம் குறித்து பயிலரங்கம் நடத்தலாம். நேரடி செயல் விளக்கம் அளிக்கலாம்.புதுச்சேரியில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டு அசோசியேஷன், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு தனித்தனியே போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. மேல்நிலை, உயர்நிலை நடுநிலை, என்ற பிரிவுகளில் இப்போட்டிகள் நடக்கின்றன.எனவே பள்ளிகளில் நடந்த ஒலிம்பிக் நிகழ்ச்சி, போட்டிகளை gmail.comஎன்ற இ-மெயிலில் போட்டோ, வீடியோ ஆதரங்களுடன் ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த ஐந்து பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது என, விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம் அறிவித்துள்ளது.