உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் ஆலோசனை

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அடுத்தக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். அதையடுத்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மீது பா.ஜ., எம்.எல்.ஏ., க்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு செய்யாமல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் செய்கிறார் என, அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்த அவர்கள், பா.ஜ., அமைச்சர்களைமாற்ற வேண்டும். தொகுதி முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக டில்லிக்கு சென்ற எம்.எல்.ஏக்கள் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வலியுறுத்தினர்.இவ்விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, கடந்த சில நாட்களுக்கு முன் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து சமாதானப்படுத்தினார். சமாதானமாகாத எம்.எல்.ஏக்கள் அடுத்தக்கட்டமாக உள்துறை அமைச்சர்அமித்ஷாவை சந்தித்து முறையிட காய் நகர்த்தி வருகின்றனர். அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.இதனிடையே பா.ஜ., எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நேற்று ஒன்று கூடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். காலை 11:00 மணிக்கு துவங்கிய ஆலோசனை 12.30 மணி வரை நீடித்தது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதித்தனர். இந்த கூட்டத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அங்காளன், ஜான்குமார், ரிச்சர்டு, சிவசங்கர், வெங்கடேசன் கலந்து கொண்டனர்.பதவி ஆசையை காட்டி அதிருப்தியில் உள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை பிரிக்க முயற்சி நடப்பதாக தகவல் பரவியது. அப்படியெல்லாம், எங்களை பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை காட்டுவதற்காகவே, இப்போது திடீரென சட்டசபையில் இந்த கூட்டத்தை நடத்தி, பலத்தை காட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.தொடர்ந்து பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், 'ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏதும் செய்யவில்லை. ஆனால் எதிர்கட்சிகள், அவரை ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கு தான் செய்கிறார். எங்களை திட்டமிட்டு பழிவாங்குகிறார்.புதுச்சேரி அரசு கேட்கும் அனைத்தையும் மத்திய அரசு, கொடுத்தும் கூட பா.ஜ., எம்.எல்.ஏக்களுக்கு ஏதும் செய்யவில்லை. ஆட்சி மீது அதிருப்தி உள்ளது.லோக்சபா தேர்தலில் பா.ஜ., நின்றால் கண்டிப்பாக தோல்வி தான் ஏற்படும் என்று எட்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்து விட்டோம்.ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., நியமன எம்.எல்.ஏக்களை எடுத்துக்கொண்டோம். லோக்சபா தேர்தலில் பா.ஜ., நிற்க வேண்டாம். என்.ஆர் காங்., நிற்கட்டும் என்றும் சொல்லிவிட்டோம். ஆனால் எங்களுடைய கருத்தை மீறி இங்கே முடிவு எடுத்தனர்.நாங்கள் சொன்னதை போன்று இப்போது தோல்வி ஏற்பட்டுள்ளது. தவறுகளை திருத்தினால் பா.ஜ., சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற முடியும். நாங்கள் பா.ஜ., வில் தான் உள்ளோம். எங்களது கோரிக்கைகளையும், கட்சி வளர்ச்சிக்கான வழிமுறைகளையும் பா.ஜ., தலைமையிடம் விரிவாக விளக்கியுள்ளோம்.தலைமை நல்ல முடிவினை எடுக்கும் என நம்புகிறோம். எந்த முடிவினை எடுத்தாலும் கட்டுபடுவோம். இன்னும் 20 மாதங்கள் ஆட்சி உள்ளது. எங்களிடம் அமைச்சர் பதவியை கொடுத்தால் நேர்மையாக பணியாற்றி கட்சிக்கு பலம் சேர்ப்போம். அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வலிமையாக வெற்றி பெறும்' என்றனர்.முதலில் முதல்வர் மாற்றம் என்ற கோஷத்தை முன் வைத்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அந்த கோரிக்கையில் இருந்து பின்வாங்கி விட்டனர். இப்போது பா.ஜ., அமைச்சர்கள் மாற்றம் என்பதை தீவிரமாக முன் வைத்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் தலைமையின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இன்னும் மூன்று நாட்களுக்கு மவுனமாக இருந்து விட்டு, அடுத்து டில்லிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை