புதுச்சேரி : லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி மைதானத்தில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியும் இணைந்து புதுச்சேரியில் 'ஐ.பி.எல்., பேன் பார்க்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள தாகூர் கல்லுாரி மைதானத்தில், 'ஐ.பி.எல்., பேன் பார்க் நிகழ்ச்சி' கடந்த 4, 5ம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடந்தது. நிகழ்ச்சியில் பெரிய திரை அமைக்கப்பட்டு ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.மேலும், டி.ஜே இசை, சிறுவர்கள் விளையாடும் களம், உணவு, குளிர்பான கடைகள் என பலவிதமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டன. இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு விட்டு, குளிர்பானங்களை அருந்திவிட்டு பிளாஸ்டிக் பைகள், பேப்பர் கப்கள், குளிர்பான காலி பாட்டில்கள் உள்ளிட்டவைகளை விளையாட்டு மைதானத்திலேயே வீசி சென்று விட்டனர். நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும், தாகூர் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் மதில் சுவர் ஓரமாக குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை நாய்கள் மற்றும் பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், சிதறி கிடக்கும் குப்பைகளால் ஏர்போர்ட் சாலையில் வாக்கிங் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். தாகூர் கல்லுாரி மைதானத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி தரும்போதே, மைதானத்துக்கான வாடகையுடன், குப்பைகளை அகற்றுவதற்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பிறகு குப்பைகளை ஓரிடத்தில் சேகரித்து வைக்க வேண்டும். அவற்றை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், 'ஐ.பி.எல்., பேன் பார்க்' நிகழ்ச்சி முடிந்து 2 நாட்கள் கடந்த பிறகும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இது நகராட்சி ஊழியர்களின் மெத்தனத்தை காட்டுகிறது. உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் இனியும் காலதாமதம் செய்யாமல் குப்பைகளை இன்றே அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எதிர்காலத்தில், நிகழ்ச்சிகள் முடிந்த இரவோடு இரவாக உடனே குப்பைகளை அகற்ற ஊழியர்களுக்கு, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.