| ADDED : ஏப் 02, 2024 03:53 AM
புதுச்சேரி : பாரதியார், பாரதிதாசன் எழுத்துக்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.புதுச்சேரி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்ட கவர்னர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழ் ஆளுமைகள் பாரதியும், பாரதிதாசனும் கம்பனுக்குப் பிறகு பிறந்த மகத்தான கவிஞர்கள். இன்றைக்கும், என்றைக்கும் தமிழ் வாழும் என்பதற்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர்கள். மக்களுடைய உள்ளங்களில் நற்சிந்தனைகளை கட்டி எழுப்பியவர்கள்.பாரதியார் இந்தியா என்ற பத்திரிகை நடத்தியிருக்கிறார். பாரதியின் வேண்டுகோளை ஏற்று பாரதிதாசன் கவிதா மண்டலம் என்று பத்திரிகை நடத்தியிருக்கிறார். நிச்சயமாக இந்த இரண்டு பெயர்களையும் இணைத்து ஒரு புதிய மாத இதழ் புதுச்சேரி அரசு சார்பாக வர வேண்டும் என்ற சிந்தனை என் உள்ளத்தில் எழுந்திருக்கிறது. அதற்கு ஒரு செயல் வடிவத்தை நிச்சயமாக விரைவில் தருவோம்.பாரதியார், பாரதிதாசன் எழுத்துக்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். புதுச்சேரியின் சுற்றுலாத் துறையின் மூலமாகவும் தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் மூலமாகவும் வரும் சுற்றுலா பயணிகள் இங்கே வரவேண்டும். இந்த இல்லங்களில் முக்கியத்துவம் தெரிகிற விதமாக அத்துனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கலை மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள்,அதிகாரிகள் உடனிருந்தனர்.
நடந்து சென்றது ஏன்?
கவர்னர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, மகத்தான மனிதர்கள் வாழ்ந்த பூமியில் நாமும் நடந்து சென்றோம் என்று சொன்னால் நமக்கு ஒரு புண்ணியம் தான் என்ற காரணத்தால்தான் பாரதியின் நினைவு இல்லத்திலிருந்து பாரதிதாசன் நினைவு இல்லத்திற்கு நடைப்பயணமாக வந்தேன் என்றார்.