உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தியா - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் 13ம் தேதி முதல் இயக்க திட்டம்

இந்தியா - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் 13ம் தேதி முதல் இயக்க திட்டம்

நாகப்பட்டினம் : இந்தியா - இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மற்றும் இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில், வரும் 13ம் தேதி முதல், நாகப்பட்டினத்தில் இருந்து மீண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது.நமது அண்டை நாடான இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையின் போது, அந்நாட்டில் உள்ள காங்கேசன் துறைமுகம் சேதமானது. துறைமுகத்தை சீரமைக்க, இந்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு 300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. வர்த்தக ரீதியாக கட்டமைக்கப்பட்ட காங்கேசன் துறைமுகம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது.இந்தியா-இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட கப்பல் சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டது.நாகப்பட்டினத்தில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு சிறிய பயணிகள் கப்பல் இயக்க பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இதையடுத்து, நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் துறைமுகம் நவீனப்படுத்தும் பணிகள் நடந்தன. துறைமுகத்திற்குள் கப்பல் வரும் வகையில் முகத்துவாரம் துார்வாரி ஆழப்படுத்தும் பணி, குடியுரிமை, மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு, பயணிகள் தங்குவதற்கு அறைகள் என, வசதிகள் செய்யப்பட்டன. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 150 பயணிகள் பயணிக்கும் வகையில், குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்ட 'சிரியா பாணி' என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு அக்.,14ம் தேதி இயக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். சுற்றுலா பயணிகளிடம் ஆர்வம் குறைவு, கடலின் பருவ மாற்றத்தால் சில தினங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தனியார் வசம் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஒப்படைக்கபட்டு, வரும் 13ம் தேதி முதல், இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.தனியார் கப்பல் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் நந்தகோபன் கூறியதாவது:சிவகங்கை என்ற சிறிய கப்பல், வரும் 13ம் தேதி, காலை 8:00 மணிக்கு நாகையில் புறப்பட்டு பகல் 12:00 மணிக்கு காங்கேசன் துறைமுகம் சென்றடையும். அங்கிருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு நாகைக்கு வந்தடையும்.160 இருக்கைகளில் 27 பிரிமியம் கிளாசிக் இருக்கை. பயணிகள் தலா 60 கிலோ எடையுள்ள பொருட்களை, 20 கிலோவாக பிரித்து எடுத்துச் செல்லலாம். இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை. இ.டி.ஏ., என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். சுங்கத்துறை விதிகளுக்குட்பட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் www.SailIndSri.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயணிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை