| ADDED : ஏப் 12, 2024 04:32 AM
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்காக, மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணி துவங்கியது. புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு, 967 ஓட்டுச்சாவடிகளில் 1934 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 967 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.இதற்காக நான்கு பிராந்தியங்களிலும் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன.இந்த ஓட்டு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியலுடன் கூடிய சின்னம் பதிக்கும் பணி நேற்று துவங்கியது.இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து 60 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 46 பேரும்,காரைக்காலில் 10 பேரும்,மாகி,ஏனாமில் தலா இரண்டு பேர் சின்னம் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அவர்கள், வேட்பாளர்கள்,முகவர்கள் முன்னிலையில் ஓட்டு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியலை சின்னதுடன் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இன்று 12 ம்தேதி ஓட்டுபதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியலுடன் கூடிய சின்னம் பதிக்கும் பணி நடக்க உள்ளது.காரைக்கால், மாகி, ஏனாமில் சின்னம் பதிக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.இந்தபணி முழுவதும் சி.சி.டி.வி.,கண்காணிப்பு கேமிராவில் பதிவு செய்யப்பட்டது.லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி,மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடந்த இப்பணியை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன்,,தலைமை துணை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல்,ஆதர்ஷ் ஓட்டு எண்ணிக்கை மைய நோடல் அதிகாரி சுதாகர் உடனிருந்தார்.