உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு வீரர்கள் இட ஓதுக்கீடு சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்தல்

விளையாட்டு வீரர்கள் இட ஓதுக்கீடு சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்தல்

பாகூர்: விளையாட்டு வீரர்களுக்கான இட ஓதுக்கீடு பிரிவில், சிலம்பத்தை இணைக்க வேண்டும் என, புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க செயலாளர் அன்புநிலவன் அறிக்கை;தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் புதுச்சேரி வீரர்கள் பல சாதனை படைத்து வருகின்றனர். புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கத்தின் மூலம் சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கி, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்து வருகின்றனர்.கடந்த 2023--24ம் ஆண்டில், தேசிய அளவிலான பெடரேஷன் கப் போட்டியில், புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் சார்பில் பங்கேற்ற வீரர்கள் 2 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் பெற்று ஒட்டு மொத்தமாக மூன்றாம் இடம் பிடித்தனர். 20வது தேசிய சிலம்பம் போட்டியில் 4 தங்கம் 25 வெள்ளி 4 வெண்கலம் பதக்கம் வென்றனர். 4வது தெற்காசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்று 2 தங்கம், 7 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கம் வென்று, புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிலம்பம் வீரர்களுக்கு எந்த வித அங்கீகாரமும் இல்லை.ஆனால், தமிழகத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழக சிலம்ப வீரர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைகின்றனர்.அதேபோல், புதுச்சேரியிலும் இட ஓதுக்கீட்டில், சிலம்பத்தை இணைத்து கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து, சிலம்ப வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை