| ADDED : ஜூன் 03, 2024 06:30 AM
செஞ்சி : செத்தவரை மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செத்தவரை சிவஜோதி மோன சித்தர் பீடத்தில், மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, கடந்த 31ம் தேதி காலை 5:00 மணிக்கு கோபூஜை, திருவிளக்கு வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி பூஜை, மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையை தொடர்ந்து, 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் மீனாட்சியம்மன், சொக்கநாத பெருமாள், திருக்குடங்கள் புறப்பாடும் 10:00 மணிக்கு மூலவர் விமான நன்னீராட்டும் நடந்தது.பிற்பகல் 1:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், மாலை 3:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.விழாவில், அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா மாநிலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை மோனசித்தர் ஆசிரம டிரஸ்டிகள் செத்தவரை, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம மக்கள் செய்திருந்தனர்.