| ADDED : ஜூன் 13, 2024 08:21 AM
புதுச்சேரி : புதுச்சேரிக்கு ரூ.100 கோடி கடனை முன்னுரிமை அளித்து விடுவிக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனியிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு அளித்து வலியுறுத்தினார்.புதுச்சேரி பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக்பாபு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அளித்த மனு; புதுச்சேரி மாநிலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. சுற்றுலாவை சிறு வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் பெரிதும் சார்ந்துள்ளன.புதுச்சேரியின் வளர்ச்சிக்காக உங்களுடைய அமைச்சகத்தின் கீழ் பல்வேறு வெற்றிகரமான திட்டங்கள் புதுச்சேரியில் துவங்கப்பட்டுள்ளன. அவற்றில் முத்ரா, சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி திட்டம், பிரதமர் தெரு வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதி திட்டம் முக்கியமானவை.புதுச்சேரியை முதன்மையாக வைத்திருக்க சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு தராளமாக கடனுதவி வழங்க நோடல் வங்கிகள் மற்றும் நோடல் அதிகாரிகளுக்கு, உத்தரவிட வேண்டும். மேலும், மத்திய அரசு 100 நாட்களுக்குள் 100 கோடி ரூபாய் கடனை புதுச்சேரிக்கு முன்னுரிமை அளித்து விடுவிக்க வேண்டும். இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாடு அடைவதோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் 10,000 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.முன்னாள் விவசாய அணி தலைவர் புகழேந்தி உடனிருந்தார்.