| ADDED : மார் 22, 2024 05:50 AM
புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி வெள்ளி விழா ஆண்டையொட்டி, பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.அதன் உறுப்புக்கல்லுாரியான சட்டக்கல்லுாரியில், 'திருமண சட்ட பிரிவு - 9ல், குறிப்பிடப்பட்டுள்ள திருமண மீட்டளிப்பு உரிமை, அரசமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள, அடிப்படை உரிமைக்கு எதிரானதா, இல்லையா,' என்பது குறித்து, மூன்று நாட்களுக்கு, தமிழ் மொழியில் வழக்கு வாத போட்டி நடந்தது. 24 அணிகள் பங்கேற்றன. போட்டியை, தமிழக அரசு மாசுக்கட்டுப்பாடு மேல்முறையீட்டு மன்ற தலைவர் நீதிபதி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். இறுதிப்போட்டியின் நடுவர்களாக சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி சாமிநாதன் பங்கேற்றனர்.அவர்கள், போட்டியின் முக்கியத்துவம், அதில் உள்ள நுணுக்கங்கள், சட்ட புத்தகங்கள் மற்றும் கோர்ட் தீர்ப்புகளை மாணவர்களை படிக்க வேண்டிய அவசியம் குறித்து விவரித்தனர்.சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லுாரி முதல் பரிசு, தேனி அரசு சட்டக்கல்லுாரி இரண்டாம் பரிசு வென்றன. பரிசளிப்பு விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் வரவேற்றார்.கல்விக்குழும செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், பொறியியல் கல்லுாரி இயக் குநர் வெங்கடாஜலபதி பங்கேற்றனர். வக்கீல் பாலா விஜயன் நன்றி கூறினார்.