| ADDED : ஆக 07, 2024 05:24 AM
புதுச்சேரி : அரும்பார்த்தபுரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கட்டட தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.அரும்பார்த்தபுரம், திருக்குறளார் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 38; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ரேவதி என்பவர் வீட்டிற்கு டைல்ஸ் லோடு வந்தது. டைல்ஸ் இறக்க உதவுமாறு ரேவதி கேட்டு கொண்டார்.ராஜ்குமார் லோடு வந்த லாரி அருகே சென்று பார்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த தக்ககுட்டையச் சேர்ந்த விஜி, சரக்கு ஏற்றுதல் இறக்குதல் வேலையை நீ பார்க்க கூடாது எனக் கூறி, ராஜ்குமாரை சராமாரியாக தாக்கினார். அடுத்த சில நிமிடத்தில் விஜி போன் செய்து மேலும் 4 பேரை வரவழைத்தார்.5 பேரும் சேர்ந்து ராஜ்குமார் வீட்டிற்குள் புகுந்து ராஜ்குமார் மற்றும் அவரது தாய் கவுரி, மனைவி பிரியா ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மூவரும் அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில், விஜி மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.