| ADDED : ஆக 08, 2024 11:02 PM
புதுச்சேரி: அமைச்சர்களின் தொகுதிக்கு தான் எல்லாம் நடக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு ஏதும் நடக்கவில்லை என, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பேசியதால் பரபரப்பு நிலவியது.பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது அவர், பேசியதாவது:கலை பண்பாட்டு துறையில் கலைமாமணி விருது பெரும் நபர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்த வேண்டும். இலவச ரேஷன் அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் வழங்கும் திட்டம் இல்லத்தரசிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது.ஆனால் சிலர் சமூக வளைதளங்களில் முதல்வரால் செய்ய முடியுமா என, கேலி செய்கின்றனர். இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி, அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். அரசு கல்லுாரிகளின் ஷிப்ட் முறையை மாற்ற வேண்டும். இனி முழு நேர கல்லுாரியாக மாற்ற வேண்டும். விளையாட்டு மற்றும் இளைஞர் நல துறையின் வழியாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி வழங்க வேண்டும். தீயணைப்பு துறைக்கு காலத்துகேற்ப நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்தால், அவர்கள் பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்ற உதவும். நபார்டு வங்கி நிதியுதவியுடன் பிள்ளைச்சாவடி முதல் கனகசெட்டிக்குளம் வரை கடல் அரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலை நகருக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். அமைச்சர்களின் தொகுதிக்கு தான் எல்லாம் நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு ஏதும் நடக்கவில்லை. இதையும் கொஞ்சம் கவனிங்க' என்றார்.