புதுச்சேரி: புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 2024--25, கல்வியாண்டில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கைக்கு, விண்ணப்ப விநியோகம், கடந்த, 13,ம் தேதி துவங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த, 22ம், தேதி வரை பெறப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை, 10ம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம், அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருவள்ளுவர் பெண்கள் பள்ளி, கதிர்காமம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி பள்ளி, ஜீவானந்தம் பள்ளி, அன்னை சிவகாமி பள்ளி, சுப்ரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுசிலாபாய் பெண்கள் பள்ளி, லாஸ்பேட்டை வள்ளலார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை சின்னாத்தா பள்ளி, முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் பள்ளி, கோரிமேடு இந்திராகாந்தி பள்ளி உள்பட புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தகுதி பட்டியல் நேற்று காலை ஒட்டப்பட்டிருந்தது.இந்த பட்டியலை மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, தங்களுக்கு தகுதி பட்டியலில், எந்த இடம் கிடைத்துள்ளது, கலந்தாய்வு நடைபெறும் தேதி, நேரம் ஆகிய விவரங்களை பார்த்து தெரிந்து கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, நாளை மறுதினம், வரும், 27ம் தேதி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில், இடம் வழங்கப்படும். ஒவ்வொரு நாள் முடியும் போதும், மீதமுள்ள இடங்கள் ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட உள்ளது.