| ADDED : ஜூலை 25, 2024 05:38 AM
புதுச்சேரி: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க புதுச்சேரி கல்லுாரி மாணவி தேர்வாகி உள்ளார்.புதுச்சேரி வேல்ராம்பட்டு, துலுக்காணத்தம்மன் நகர், 3வது குறுக்கு வீதியில் வசிக்கும் கல்லுாரி மாணவி அனுஷ்யா, பளு துாக்கும் வீரங்கணையான இவர், தென் ஆப்ரிக்கா சன் சிட்டியில் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். இவரது தந்தை கன்னியப்பன் ஆசிரம ஊழியர். தாய் மீனாட்சி வீட்டை கவனித்து வருகிறார். அனுஷ்யா, தனது சகோதரனை உடற்பயிற்சி கூடத்தில் சேர்ப்பதற்காக அழைத்து சென்றபோது, பயிற்சியாளரின் அறிவுரையை கேட்டு பளு துாக்கும் பயிற்சியில் சேர்ந்தார்.பயிற்சியில் சேர்ந்த 6 மாதத்தில், தேசிய அளவில் உத்தரபிரதேசத்தில் நடந்த பளு துாக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். ராஜஸ்தானில் நடந்த போட்டியில் தங்க பதக்கம், ஹைதராபாத்தில் நடந்த தேசிய போட்டியில் தங்க பதக்கம் மற்றும் இந்தியன் ஸ்ட்ராங்க் உமன் விருதும் பெற்றார். கடந்த மாதம் பஞ்சாப்பில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடந்த போட்டியிலும் வெள்ளி பதக்கம் வென்று, ஐரோப்பாவில் நடந்த உலக அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.மாநில அளவில் 3 தங்க பதக்கம் பெற்றுள்ள, வீராங்கனை அனுஷ்யா, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் 3ம் ஆண்டு படித்து வரும் அனுஷ்யா, தினசரி 3 மணி நேரம் உடற்பயிற்சி எடுத்து வருகிறார். அவர், கூறுகையில், தேசிய மற்றும் உலக அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க பொருளாதார ரீதியாக சிரமம் உள்ளது. பெற்றோர் மொத்த சேமிப்பையும் போட்டியில் பங்கேற்க செல்வதற்கே செலவிடுகின்றனர். தேசிய போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மாநில அரசு ஊக்க தொகை வழங்கினால் ஏராளமான வீரர்களுக்கு உதவியாக இருக்கும்' என்றார்.இவரது பயிற்சியாளரான கால்நடை பராமரிப்பு துறை எல்.டி.சி., பாக்கியராஜ், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அனுஷ்யாவுடன் செல்கிறார்.