புதுச்சேரி: அமைச்சர் நமச்சிவாயம் ஆதரவாளரான பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் துவங்கியது.புதுச்சேரி கணுவாப்பேட்டை சேர்ந்தவர் செந்தில்குமரன், 46; உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர். மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர். கடந்த ஆண்டு மார்ச், 26ம் தேதி இரவு, வில்லியனுார் கண்ணகி பள்ளி அருகில் உள்ள பேக்கரி கடையில் டீ குடித்தார். அப்போது, மூன்று பைக்குகளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 6 பேர், வெடிகுண்டு வீசி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் செந்தில்குமரனை வெட்டி கொலை செய்து தப்பித்தனர். வில்லியனுார் வழக்கு பதிவு செய்தனர். பின், இந்த வழக்கு, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன விசாரணைக்கு மாற்றப்பட்டது.என்.ஐ.ஏ., விசாரணையில், புதுச்சேரி திருக்காஞ்சியைச் சேர்ந்த ரவுடி நித்தியானந்தம், 43; கூலிப்படையைச் சேர்ந்த புதுபூஞ்சோலைகுப்பம் ராஜாமணி, கிளிஞ்சிக்குப்பம் பிரதாப்; அரியாங்குப்பம் சேது (எ) விக்னேஷ், கொம்பாக்கம் சங்கர் (எ)சிவசங்கர், கோர்காடு கார்த்திகேயன், தனத்துமேடு வெங்கடேஷ், கோர்காடு ஏழுமலை, கதிர், கிளிஞ்சிகுப்பம் ராமச்சந்திரன், ஆரியப்பாளையம் லட்சுமணன், திலீபன், ராஜா ஆகிய 13 பேர் சேர்ந்து செந்தில்குமரன் மீது வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.அனைவரும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நித்தியானந்தம் உள்ளிட்டோர் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தி வெடிகுண்டு தயாரிப்புக்கான மருந்துகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். 13 பேர் மீதும் புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 2,250 பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, செந்தில்குமரன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முதல் துவங்கியது.