| ADDED : ஜூன் 28, 2024 06:16 AM
புதுச்சேரி: நிலத்தடி நீரில் கடல் உட்புகாமல் தடுக்க மழை நீர் சேகரிப்பு மட்டுமே நிரந்தர தீர்வு என, ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசினார்.புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டு துறை சார்பில் நவீன நாடக நடிப்பு முறைகள், பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி, காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். பயிற்சி பட்டறையை ஜான்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசியதாவது:புதுச்சேரி மாநிலம் நிலத்தடி நீரை பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், இப்போது நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கடலில் இருந்து 15 கி.மீ., தொலைவிற்கு கடல் நீரும் உள்ளே புகுந்துள்ளது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி மழை நீர் சேகரிப்பு மட்டுமே.ஆனால், புதுச்சேரி அரசு கடல் நீரை குடிநீர் திட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் சாத்தியமானது அல்ல. இந்தியாவில் வெற்றி பெறவும் இல்லை. வளைகுடா நாடுகளில் இது வெற்றிப் பெற்றுள்ளது. இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் முதல்வர் கேட்க மாட்கிறார். நிலத்தடி நீரில் கடல் உட்புகாமல் தடுக்க மழை நீர் சேகரிப்பு மட்டுமே நிரந்தர தீர்வு. புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 1.5 லட்சம் வீடுகளில் மழை நீரை சேகரித்தால் 15 கி.மீ.,தொலைவிற்கு உள்ளே புகுந்துள்ள கடல் நீர், படிப்பாக பின்வாங்கி விடும்' என்றார்.நாளை வரை நடக்கும் பயற்சி பட்டறையியில் பொம்மலாட்டம், நவீன நாடக நடிப்புகள் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.