| ADDED : ஜூன் 30, 2024 06:25 AM
புதுச்சேரி : வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், கட்டணத்தை குறைப்பதால் வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள், சுற்றுலா ஏற்பாடு செய்து தரும் ஆன்லைன் தனியார் நிறுவனங்களில் இணைந்து வாடகை கார்களை இயக்கி வருகின்றனர். புதுச்சேரி ஓட்டல்களில் தங்கும் சுற்றுலா பயணிகள், சென்னை ஏர்போர்ட் உள்ளிட்ட தமிழக சுற்றுலா தளங்கள் செல்ல சுற்றுலா ஏற்பாட்டாளர் நிறுவனங்கள் வாடகை கார்களை புக் செய்து தருகிறது. புதுச்சேரி - சென்னை ஏர்போர்ட்டிற்கு செல்ல ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை சுற்றுலா பயணிகளிடம் பெற்றுக் கொண்டு, வாடகை கார்களுக்கு குறைந்த கட்டணம் வழங்கி வந்தனர். அதுவும் வாரத்தில் 4 சவாரிகள் மட்டுமே கொடுத்து வந்தனர்.கடந்த சில நாட்களில் இந்த கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் மேலும் குறைத்தது. புதுச்சேரி - சென்னை ஏர்போர்ட் செல்ல ரூ. 1,500 வரை குறைத்து விட்டது.இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாகவும், புதுச்சேரி - சென்னை ஏர்போட் செல்ல, நிரந்தர கட்டணத்தை நிர்ணயித்து வழங்க கோரி நுாறடிச்சாலை, சன்வே ஓட்டல் அருகே வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலியார்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சில நிமிடங்களிலே மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. போக்குவரத்து துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.