| ADDED : மே 02, 2024 01:11 AM
புதுச்சேரி : ஆரியபாளையத்தில் இடிக்கப்பட்ட சோழர்கால கல் மண்டபத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வில்லியனுார் அடுத்த ஆரியபாளையம் பகுதி சங்கராபரணி ஆற்றங்கரையோரப்பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட கல் மண்டபம் ஒன்று உள்ளது. ஆரம்ப காலத்தில், இந்த மண்டபம் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோகிலாம்பிகை கோவிலினுடைய தீர்த்தவாரி மண்டபமாக இருந்தது.திருமணம் முடிந்தவுடன், புதுபெண்ணை இந்த மண்டபத்தில் சடங்குகள் செய்து அழைத்து செல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி காரணமாக இந்த கல்மண்டபம் பொதுப்பணித்துறை மூலம் இடித்து தள்ளப்பட்டது. சிறப்பு வாய்ந்த இந்த மண்டபத்தை இடிக்கும் நேரத்தில் அங்கிருந்து கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் கால அவகாசம் கேட்டனர். அதை பொருட்படுத்தாமல் ஜே.சி.பி., மூலம் இடித்து தரை மட்டமாக்கினர். அரசு விதிமுறைப்படி கல்மண்டபம் இடிக்கப்பட்டுள்ளதா என்பதை விளக்கம் அளிக்க வேண்டும். இடிக்கப்பட்ட மண்டப பொருட்கள் திருடு போகாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கல் மண்டபத்தை ஒரு காட்சிப் பொருளாக பார்க்காமல், அதே பகுதியில் வேறு இடத்தில் கட்டுவதற்கு அரசு முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்களான வரலாற்று ஆய்வாளர் வேல்முருகன், பேராசிரியர் ஆனந்தன், இயக்குனர் அருண்மொழி சோழன், பிரசாத் நாராயணன், வேதபுரி ஆதினம் சடை சாமிகள், ஜெயராஜன் மற்றும் பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.