புதுச்சேரி : ரெட்டியார் பாளையம் பகுதியில், விஷ வாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, சிவசங்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.ரெட்டியார்பாளையம் புதுநகரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர், அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டார்.அவர், கூறியதாவது; புதுநகர், செல்லபாபு நகர், மூகாம்பிகை நகர், வேலன் நகர், துாய தம்பி கார்டன், ஜெயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விஷ வாயு பிரச்னை, கடந்த ஓராண்டாக உள்ளது. இது சம்மந்தமாக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில் தான், மூன்று உயிர்கள் பறி போய் உள்ளன. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்று விட்டேன். போலீஸ், சுகாதாரம், பொதுப்பணித்துறை, நகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் அங்கு அழைத்தேன்.அதற்கு பிறகு, போலீசார், 'மைக்' மூலம், அந்த பகுதி குடியிருப்புவாசிகளை, வீட்டை விட்டு வெளியே வர சொல்லி அறிவுறுத்தினர். அனைவருக்கும், உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், அப்பகுதி தெருக்களில், கழிவு நீர் தொட்டிகளில் இருந்த நச்சு வாயுவை வெளியேற்றினர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளிகள், கோவில்கள், சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.விஷ வாயு தாக்கி, உயிரிழந்து விடுவோ என, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு, முதல்வர் உரிய நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இறுதி சடங்கிற்கு, தலா, ரூ.25 ஆயிரம் வீதம், வழங்கப்பட்டுள்ளது.இறந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு வேலை வாய்ப்பை முதல்வர் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.