உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் வீடு கட்டும் திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு! சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

காமராஜர் வீடு கட்டும் திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு! சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி : காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்திற்கான மானியம் ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது; பட்ஜெட் மானிய கோரிக்கைகள் மீது அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் மாநில வளர்ச்சிக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அமைச்சர்களும் தெளிவான பதில்கூறியுள்ளனர். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தர வேண்டும் என்பது அரசின் எண்ணம். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. நடுவிலே தடைபட்டிருந்தாலும் மீண்டும் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். கல்வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதி ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.அதேபோன்று பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு வழங்கும் ரூ.2.25 லட்சம் நிதியுடன், மாநில அரசின் நிதியைச் சேர்த்து அதற்கும் ரூ. 5 லட்சம் கொடுக்கப்படும். மத்திய அரசு அளிக்கும் நிதியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மாநில அரசின் நிதியின் மூலமாகவும் கல்வீடு கட்டும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம்.சட்டமன்றத்தைக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் வெளிப்படுத்தி உள்ளனர். சட்டசபை பழமையான கட்டடமாக இருப்பதால் புதிய சட்டசபை கட்டப்பட வேண்டியது அவசியம். நிதி ஒரு பிரச்னை இல்லை. மத்திய அரசிடம் நிதி கேட்டிருக்கிறோம். சட்டசபை கட்டுவது என்று முடிவெடுத்து விட்டால் நிச்சயமாக கட்டியாக வேண்டும். ஆனால் எந்த இடத்தில் கட்டுவது என்பதில் முடிவு கிடைக்காமல் உள்ளோம். எவ்வாறு கட்டுவது என்பதில் வெவ்வேறு நிலைகளில் கருத்துகள் இருந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் சட்டசபைக்கான அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டும் பணி துவக்கப்படும். புதுச்சேரியில் இ-பஸ் வாங்க உள்ளோம். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய வழித்தடங்களில் பெர்மிட் வாங்கி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிறைய பஸ் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாண்லே நிறுவனத்தில் ஐஸ்கிரீம் வகைகளை தயாரிக்கும் வகையில் ரூ. 30 கோடி செலவில் ஐஸ்கிரீம் பிளான்ட் அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் ஸ்பின்கோ தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நலிந்த நிலையில் இருந்த அமுதசுரபி, கான்பேட் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று நடந்து வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டு வருகின்றது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு மிகுந்த கவனம் செய்து வருகிறது. அறிவித்த எந்த திட்டங்களையும் அரசு விட்டு விடாது. சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டாலும் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும். பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்களுக்கு மாதம் ரூ.18,000 உயர்த்தப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும். கடந்த காங்., ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை எப்படி பணியமர்த்தலாம் என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். பாப்ஸ்கோ நிறுவனத்தில் வேலை செய்த நாட்களுக்குரிய சம்பளத்தை மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 13.36 கோடி கடன் தள்ளுபடி செய்ய அமைச்சரவை ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. நேரு வீதி பெரிய மார்க்கெட் ஒவ்வொரு பகுதியாக கட்டப்படும். முதலில் மேற்குப் பகுதியிலிருந்து கட்டுமான பணியை துவக்க சொல்லியிருக்கிறேன். நெல்லுக்கான ஊக்கத்தொகை கிலோவிற்கு ரூ. 2 அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு மற்ற மாநிலங்களில் எப்படி ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது என்பதை கலந்து ஆராய்ந்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் மாட்டுத் தீவனம் நான்கு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆண்டு முழுவதும் வழங்கப்படும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை