| ADDED : ஜூன் 09, 2024 03:10 AM
மயிலாடுதுறை, : ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமினில் வந்த பா.ஜ., மாவட்ட தலைவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானத்தை பணம் கேட்டு மிரட்டிய புகாரில், பா.ஜ., மாவட்ட தலைவர் அகோரம் கடந்த மார்ச் 16ம் தேதி கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் நேற்று நிபந்தனை ஜாமினில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு மயிலாடுதுறை சித்தர்காடு அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தருமபுரம் ஆதீனத்தை மிரட்டியதாக என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதீனத்தின் மீது மிகப்பெரிய பற்று வைத்துள்ளேன். பட்டினப்பிரவேசம் நடத்தக்கூடாது என தி.மு.க., அரசு தடை விதித்த போது இரவு பகல் பாராமல் உழைத்து பட்டினப்பிரவேசத்தை நடத்திக்காட்டினேன்.சீர்காழி சட்டநாதர் கோவிலில் செப்பேடுகள், உலோக சிலைகள் கண்டெடுத்த போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஒத்துழைப்பாக இருந்தேன். பா.ஜ.,விற்கும், ஆன்மிகத்திற்கும் எதிராக இருக்க மாட்டேன். நான் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்காக வீண்பழி சுமத்தியுள்ளனர். நான் தவறாக பேசியிருந்தால் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்.என்மீது போடப்பட்ட பொய் வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக கவர்னரை சந்திக்க உள்ளேன். என் மீது தவறான குற்றம் சுமத்தியவர்களை சட்டரீதியாக தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன்.இந்த வழக்கில் ஆதீன நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தால் அனைத்தும் வெளியில் வந்துவிடும் என்றார்.