| ADDED : மே 19, 2024 06:36 AM
நெய்வேலி, : நெய்வேலியில் லாரியை திருடிச் சென்றவரை விழுப்புரம் போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி சக்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; இவர் ஆர்ச் கேட் அருகே நிறுத்தி வைத்திருந்த லாரி நேற்று முன்தினம் காலை திருடு போயிருந்தது.இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அடுத்த அய்யூர் கிராமம் அருகே நெடுஞ்சாலையோரம் நீண்ட நேரமாக லாரி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், லாரியின் பின்னால் எழுதப்பட்டிருந்த வெங்கடேசனின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர்.அப்போது வெங்கடேசன், தனது லாரிதான் எனவும், திருடு போனதாகவும், நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கேயே காத்திருந்போது, சிறிது நேரத்தில் டீசல் கேனுடன் அங்கு வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் காட்டுமன்னார்கோவில் அடுத்த மதகடி கிராமம் பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் சரத்பாபு, 34; என்பதும், லாரியை கடத்தி வந்தபோது டீசல் தீர்ந்ததால் லாரி நின்றது. டீசல் வாங்கி வந்து நிரப்பி எடுத்துச் செல்ல இருந்ததது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து அவரை ரோந்து போலீசார் பிடித்து, நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.