| ADDED : ஏப் 23, 2024 03:53 AM
புதுச்சேரி : சுகாதார சீர்கேட்டை தடுக்க தவறினால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ.,வையாபுரிமணிகண்டன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முத்தியால்பேட்டை தொகுதி அங்காளம்மன் நகர் வீதிகளில் மாடுகளை வளர்க்கின்றனர். இதன் கழிவுகள் மக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் வாய்க்காலில் கலக்கின்றனர். இதனால் அங்காளம்மன் நகர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.முத்தியால்பேட்டையில் சுகாதார சீர்கேடுகளால் பன்றிகாய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை தடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் கண்டும், காணாமலும் இருந்து வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்தக்கூட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித்துறை நிர்வாகம் முற்றிலும் சீர்கெட்டு கிடக்கிறது. வரி என்ற பெயரில் மக்களை சுரண்டி, கொள்ளையடிப்பதில் மட்டும் நகராட்சி அதிகாரிகள் முனைப்போடு செயல்படுகின்றனர். ஆனால் நகராட்சி மூலம் மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் எதையும் நிறைவேற்றுவதில்லை.கால்நடை வளர்ப்பவர்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடு, தெருநாய்கள் தொல்லையை நகராட்சி அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் முத்தியால்பேட்டை மக்களை திரட்டி, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது