வ.உ.சி., மேல்நிலைப்பள்ளியில் ஓராண்டாக பணிக்கு வராத முதல்வர் என்ன செய்ய போகிறார் கல்வி அமைச்சர்?
புதுச்சேரி வ.உ.சி.பள்ளி முதல்வர் ஓராண்டாக விடுமுறையில் உள்ளதால், மாணவர்களின் கல்விக் கனவு பாழாகி வருகிறது.புதுச்சேரி நகரின் இதய பகுதியான மிஷன் வீதியில் 125 ஆண்டுகளை கடந்த வ.உ.சி., மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பாரதிதாசன் உள்ளிட்ட பலர் ஆசிரியராக பணியாற்றி, ஏராளமான மாணவர்களை உருவாக்கி தந்த பெருமைக் கொண்ட இப்பள்ளியில், பணியாற்றிய கரிமா தியாகி என்ற பெண் முதல்வர் கடந்த ஓராண்டிற்கு மேலாக விடுமுறையில் சென்றுள்ளார்.கடந்த 2018ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வு மூலம் எட்டு விரிவுரையாளர்கள் புதுச்சேரி கல்வித்துறையில் பள்ளி முதல்வராக பணியில் சேர்ந்தனர். இதில் இருவர் உள்ளூரை சேர்ந்தவர்கள். மற்ற ஆறு பேர் கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம், டில்லியை சேர்ந்தவர்கள்.இதில் வ. உ. சி., பள்ளி முதல்வராக உள்ள கரிமா தியாகி முதலில் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளி, குயவர்பாளையம் மணிமேகலை மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி விட்டு கடந்த ஆண்டு வ.உ.சி., பள்ளிக்கு இடமாறுதலில் வந்தார்.இவர் பணியாற்றிய இரண்டு பள்ளிகளிலும் பல நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு டில்லிக்கு சென்றுள்ளார். டில்லியில் இருந்து வரும் அழுத்தத்தால் இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கல்வித் துறை அதிகாரிகள் இருந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு வ.உ.சி., பள்ளிக்கு இட மாற்றலில் வந்த இவர். சில நாட்களே பள்ளிக்கு வந்து விட்டு, பின், விடுமுறையில் சென்றவர் இதுவரை பணிக்கு வரவில்லை. தனால் சின்னாத்தா மேல்நிலைப்பள்ளி பள்ளி முதல்வர் கூடுதலாக வ.உ.சி., பள்ளியை ஓராண்டாக கவனித்து வருகிறார்.நிரந்தர பள்ளி முதல்வர் இல்லாததால் வ.உ.சி., பள்ளியில் பல வகுப்புகளுக்கு சில ஆசிரியர்களே வருவதால், மாணவர்களே தட்டு தடுமாறி பயிலும் நிலை இருந்து வருவதாக பெற்றோர்கள் புலம்புகின்றனர்.இதுமட்டுமின்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் இந்த வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையே கடந்த ஆண்டு முதல் நடத்தவில்லை. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டு வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 430 பேர் மட்டுமே பயில்கின்றனர். பல வகுப்பறைகள் பயன்படுத்தாமல் காலியாக உள்ளன.நகரத்தில் உள்ள ஒரே ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதுபோன்ற அவலம் நீடிப்பது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன செய்ய போகிறார் கல்வி அமைச்சர்?