உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 1.20 லட்சம் மீனவர் ஓட்டுகள் யாருக்கு? குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

புதுச்சேரியில் 1.20 லட்சம் மீனவர் ஓட்டுகள் யாருக்கு? குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

புதுச்சேரியில் மீனவர்கள் ஓட்டு யாருக்கு விழுந்தது என, அரசியல் கட்சிகள் கணக்குபோட்டு வருகின்றன.புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாவது பெரிய சமுதாயமாக மீனவர்கள் உள்ளனர். 1.20 லட்சம் ஓட்டுகள் இவர்களிடம் உள்ளது. லோக்சபா தேர்தலில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கினார்.அதையடுத்து, மீனவர்கள் ஓட்டு மீனவருக்கே என சத்தம் இல்லாமல் எதிரொலிக்க துவங்கியது. இது தொடர்பாக, மீனவ பஞ்சாயத்துகள் கூடி விவாதித்து, ஒட்டுமொத்த மீனவர்களும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரிக்க முடிவெடுத்ததாக கூறப்பட்டது. இதையறிந்த தேசிய கட்சிகளான காங்.,-பா.ஜ., வேட்பாளர்கள் 'ஷாக்' ஆகினர்.அதையடுத்து, தேசிய கட்சிகள் மீனவர் கிராமங்களில் களம் இறங்கின. தங்களது கட்சிக்கு நெருக்கமானவர்களை பேசி, அந்தந்த கிராமங்களில் தேர்தல் களத்தில் இறங்கி விட்டன. அதன் பிறகு மீனவ கிராமங்களில் காட்சிகள் தலைகீழாக மாறியது. மீனவ கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு தேசிய கட்சி வேட்பாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.முதல்வர் ரங்கசாமியும், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயமும் நேரடியாகவே களத்தில் இறங்கி ஓட்டு கேட்டனர். நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என, காங்., வேட்பாளர் வைத்திலிங்கமும் மீனவ கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.,வினர், பணப்படுவாடாவை எதிர்த்து போராட்டம் நடத்த, தேசிய கட்சிகளோ அதில் கொஞ்சம் தீவிரமாக இறங்கி ஓட்டுகளை பிரித்தன.அதன் பிறகு, தேசிய அரசியல் கட்சியினரை வரவேற்ற மீனவர்கள், எங்கள் ஓட்டு உங்களுக்குத் தான் என்று உறுதியளித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், தேர்தலில் மீனவர்களின் ஓட்டு தங்களுக்கு கிடைத்ததா என்பதில் அரசியல் கட்சிகளால் தெளிவான முடிவுக்குவர முடியாமல் குழப்பமான நிலையிலேயே உள்ளனர்.அனைத்து கிராமங்களிலும் நம்மை நன்றாக வரவேற்றனர். ஓட்டு போடுகிறோம் என உறுதி கூறினர்.அதே சமயம், எதிர்க்கட்சியையும் புறக்கணிக்கவில்லை என்ற சந்தேகம் அனைத்து கட்சிகளுக்கும் இருந்து வருகிறது.வெற்றியை தீர்மானிக்க கூடிய மூன்றாவது சமுதாயமான மீனவர்களின் ஓட்டுகள் எந்த பக்கம் சாய்ந்தது என, அரசியல் கட்சிகள் கணக்கு போட்டு வருகின்றன. மீனவர்களின் 1.20 லட்சம் ஓட்டுகள் மாநில கட்சியான அ.தி.மு.க., வீசிய வலையில் சிக்கியதா அல்லது தேசிய கட்சிகள் வீசிய வலையில் சிக்கியதா என, ஜூன் 4ம் விடை தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை