| ADDED : ஆக 22, 2024 01:51 AM
புதுச்சேரி : தனியார் மருத்துவக்கல்லுாரிகள், புதுச்சேரி மாணவர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கவர்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லுாரிகள், உள்ளூர் மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க கவர்னர் தலையிட வேண்டும். இங்குள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கவில்லை என்றால் குடிநீர், மின்சாரம் போன்றவற்றை அரசு நிறுத்த வேண்டும். இதுகுறித்து, கவர்னர் குழு அமைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஏன், 50 சதவீத இட ஒதுக்கீட்டை மறுக்கின்றனர் என்ற காரணத்தை அறிய வேண்டும். தற்போது, 50 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி வரும் நாராயணசாமி, அவர் முதல்வராக இருந்தபோதும், மத்தியில் காங்., அரசு இருக்கும் போதும் என்ன செய்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும், தற்போதுள்ள லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு எம்.பி.,க்களும், பார்லிமெண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ஏன் பேசவில்லை என்பதை மக்கள் மத்தியில் விளக்க வேண்டும். அவர்கள் மாநில நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முன் வர வேண்டும். மேலும், என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இது குறித்து கவர்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.