உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நமச்சிவாயம் தோல்வியை தழுவியது ஏன்? விஸ்வரூபம் எடுத்த ரேஷன் கடை மூடல், ரெஸ்டோ பார் விவகாரங்கள்

நமச்சிவாயம் தோல்வியை தழுவியது ஏன்? விஸ்வரூபம் எடுத்த ரேஷன் கடை மூடல், ரெஸ்டோ பார் விவகாரங்கள்

புதுச்சேரி: வரைமுறையின்றி ரெஸ்ட்டோ பார்களுக்கு அனுமதி தந்தது, கஞ்சாவை கட்டுப்படுத்த தவறியது, ரேஷன் கடைகளை திறக்காதது போன்ற காரணங்களால், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவி உள்ளார்.புதுச்சேரி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவியுள்ளார். இது, ஆளும் என்.ஆர்., காங்., - பா.ஜ., கூட்டணி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. என்.ஆர்., காங்., கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.,க்களும், சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு சுயேட்சைகள் என பா.ஜ.,வுக்கு 12 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி மொத்தம் 22 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ளபோதிலும், மத்தியிலும், மாநிலத்திலும் அக்கட்சியின் ஆட்சி நடந்தபோதும், நமச்சிவாயம் தோல்வியை தழுவியுள்ளார். இது, புதுச்சேரியில் 'பா.ஜ., மாடல் ஆட்சி' தோல்வியடைந்துள்ளதை காட்டுவதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தோல்விக்கான காரணங்கள் இதோ...

சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் சகட்டுமேனிக்கு ரெஸ்ட்டோ பார்கள் திறக்க அரசு அனுமதி அளித்து வருகிறது. கோவில்கள் மற்றும் பள்ளிகள் அருகிலும், வீடுகளுக்கு மத்தியிலும் ரெஸ்ட்டோ பார்களை திறக்க அனுமதித்ததால் நள்ளிரவை தாண்டியும் குடியும் கும்மாளமுமாக சுற்றுலா பயணிகள் புதுச்சேரி மக்களின் துாக்கத்தை கெடுத்து வருகின்றனர்.இதுகுறித்து உள்ளூர் மக்கள் எவ்வளவு கூறியும், ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. அரசுக்கு வருமானம் மட்டுமே முக்கியம் என்ற மனநிலையில் இருந்து விட்டனர். வீதியில் இறங்கி போராடியும் அலட்சியம் செய்ததால் பெண்கள் ஆத்திரமடைந்தனர்.பொழுது விடிந்தால் தங்களது வீட்டிற்கு பக்கத்தில் புதிது புதிதாக முளைக்கும் ரெஸ்டோ பார்களை பார்த்து, பெண்கள் 'கை' பக்கம் ஒட்டுமொத்தமாக சாய்ந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி, மளிகை பொருட்களை வழங்கி கொண்டு இருக்க, புதுச்சேரியோ ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமாகி விட்டது. இதனால், கடும் அதிருப்தியில் இருக்கும் பெண்கள், பிரசாரத்திற்கு வந்த முதல்வர் ரங்கசாமியிடம் நேரடியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுவும், வைத்திலிங்கத்திற்கு சாதகமாக மாறியது.அடுத்ததாக, கஞ்சாவை தடுக்கும் விஷயத்தில் அரசு தோல்வியடைந்து விட்டதாக, பொதுமக்கள் கருதுகின்றனர். அனைத்து பகுதிகளிலும் மாணவர்களும், இளைஞர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருவது பெற்றோர்கள் மனதில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் கோபம், காங்., கட்சிக்கு ஓட்டுகளாக மாறி உள்ளது.கஞ்சா கும்பலால் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை, என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி அரசு சரியாக கையாளவில்லை. சிறுமி இறப்பு விவகாரத்தில் மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் எதிர்கட்சிகள் பந்த் அளவிற்கு சென்ற பின் தான் பா.ஜ., சுதாகரித்தது.அதேநேரத்தில், இந்த விவகாரத்தை காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் லோக்சபா தேர்தலுக்கான அரசியல் களமாக மாற்றி விட்டன.தேர்தலில் பா.ஜ., நிற்பது ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாகி விட்டது. அதற்கேற்ப மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து புதுச்சேரிக்கு வரிசை கட்டி வந்து, மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு சென்றனர். ஆனால், வேட்பாளர் தேர்வில் நிலவிய பெரும் இழுபறி பா.ஜ., தொண்டர்களுக்கே சோர்வை ஏற்படுத்தியது.அதே நேரத்தில், வேட்பாளர் தேர்வு விஷயத்தில் காங்., கட்சி தெளிவாக இருந்தது. பா.ஜ.,வில் வேட்பாளர் யார் என்பது தெரியாத நிலையிலும், நமச்சிவாயம் தான் எதிர்வேட்பாளர் என்று திட்டமிட்டு காய்களை நகர்த்தியது வெற்றிக்கு அடித்தளமிட்டது.போலீசாரை தவிர்த்து, மற்ற அரசு ஊழியர்களின் ஓட்டுகளை பெறுவதில் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி தவறிவிட்டது. மின்துறை தனியார்மயமாக்கல், ஆசிரியர்கள் இடமாற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகள் வரிசை கட்டி, அரசு ஊழியர்களின் ஓட்டுகளை, பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக திரும்பி விட்டது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, புதுச்சேரியில் சாதி அரசியல் எடுபடாது என்பதும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. அதுபோல, தாராளமாக வாரி வழங்கினாலும், கட்சியை பார்க்க மாட்டார்கள்; வேட்பாளரை பார்த்தே ஓட்டு போடுவார்கள் என்பதும் நேற்றைய முடிவுகளில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mohana sundaram
ஜூன் 07, 2024 16:33

தரமான ஆட்சி அமைக்க நடுத்தர ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலைவாசி கட்டுப்பாடு மற்றும் அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டு அன்றாட அடிப்படை தேவைகளை வழங்கி மக்களின் மனதில் இடம் பிடிக்க எந்த கட்சி செயல்படுமோ அந்த கட்சிதான் வெற்றி பெறும் இலவசத்தைக் குறைத்து தரமான தகுதியுடைய மக்களுக்கு மட்டும் தேவையான இலவசம் பெற வழிவகை செய்ய வேண்டும்


முக்கிய வீடியோ